ரந்தாவ்: கடந்த 2008-ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இடமாற்றிய ஆதாரத்தை நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் யூசோப் தாபார் , ரந்தாவ் காவல் துறையிடம் ஒப்படைத்து புகார் ஒன்றினை செய்துள்ளார்.
58 நொடிகள் நீடிக்கும் ஒரு காணொளியை அவர் காவல் துறையிடம் ஆதாரமாக ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், தமது சொந்த பணமான 10 மில்லியன் ரிங்கிட்டை, இங்கிலாந்தில் உள்ள சொகுசு வீட்டை வாங்குவதற்காக பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்ததை அகமட் சுட்டிக் காட்டினார்.
“இது குறித்து உழல் தடுப்பு ஆணையத்திடமும் நாங்கள் புகார் அளிப்போம்” என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நெகிரி செம்பிலான் அமானா கட்சி இளைஞர் பகுதியினர், இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.