Home இந்தியா இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (3) – வரலாற்று எழுத்தாளர் வசமாகுமா மதுரை நாடாளுமன்றம்?

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (3) – வரலாற்று எழுத்தாளர் வசமாகுமா மதுரை நாடாளுமன்றம்?

1047
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்த தொடர் கதை ‘வீரயுக நாயகன்  வேள்பாரி’. பழங்காலத் தமிழகத்தில் குறுநில மன்னனாகத் திகழ்ந்த வேள்பாரியின் வீரதீரச் செயல்களை விவரித்த இந்த நாவலில் பண்டையத் தமிழர்களின் போர்முறைகள் குறித்தும், வாழ்வியல் குறித்தும் விரிவாக ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கப்பட்டிருந்தன.

அந்த நாவலை எழுதியவர் சு.வெங்கடேசன். ஏற்கனவே, ‘காவல் கோட்டம்’ நாவல் மூலம் சாகித்திய அகாடமி விருது பெற்று தமிழக  இலக்கிய உலகில் முத்திரை பதித்திருந்தவர் வெங்கடேசன். காவல் கோட்டம், இயக்குநர் வசந்த பாலனின் கைவண்ணத்தில் பின்னர் ‘அரவான்’ திரைப்படமாகவும் வெளிவந்தது.

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்….

இந்தியப் பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் மதுரை வேட்பாளராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலை எழுதிய அதே வெங்கடேசன் அறிவிக்கப்பட்டபோதுதான் அவருக்கு இன்னொரு அரசியல் முகமும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிய வந்தது. இந்தப் பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் களமிறங்கியவர் வெங்கடேசன்.

#TamilSchoolmychoice

மதுரை மண்ணின் பெருமைகளை எழுத்து வடிவத்தில் கொண்டு வந்ததிலும்,  அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் பழம் பெருமைகளை வெளிக் கொணர்வதிலும் பெரும் பங்காற்றியிருக்கும் வெங்கடேசன், அரசியலிலும் பிரகாசிப்பாரா என்பது மே 23 தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.

ஏப்ரல் 18-இல் நடைபெற்ற வாக்களிப்பில் 65.83 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு இயல்பாக மதுரை வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கு, திமுகவின் ஆதரவு, காங்கிரஸ் போன்ற கூட்டணிக்  கட்சிகளின் ஆதரவோடு, மதுரை மண்ணுக்குச் சொந்தக்காரர் என்ற முகத்தோடும், பிரபல எழுத்தாளர் என்ற பெயரோடும் களமிறங்கும் வெங்கடேசனுக்கு ஸ்டாலினே  நேரடியாக வந்து பரப்புரை நிகழ்த்தி உதவியிருக்கிறார்.

ஆக, மதுரையில் வெற்றி பெற்றால் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு தமிழ் எழுத்தாளர் இந்திய நாடாளுமன்றத்தில் அமரும் சூழல் ஏற்படும்.

ஆனால், நிலைமை முழுக்க முழுக்க திமுக கூட்டணி வேட்பாளரான வெங்கடேசனுக்கு சாதகமாக இருக்கிறதா என்பது சந்தேகம்தான்!

சீமான் கட்சி சார்பில் காளிமுத்துவின் மகன் போட்டி

“கருவாடு மீனாகாது – கறந்த பால் மடிபுகாது” போன்ற அரசியல் சரவெடிகளை ஒரு காலத்தில் தமிழக அரசியலில் வெடித்துக் கொண்டிருந்த அதிமுகவின் பிரமுகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் தலைவர் (மேயர்) ராஜனின் புதல்வர் ராஜ்சத்யன் போட்டியிட்டார். இவரும்  ஒரு வலுவான வேட்பாளராகப் பார்க்கப்படுவதால், மதுரை தொகுதியின் தேர்தல் முடிவுகள் எவ்வாறிருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர் மதுரை மக்கள்!

இதற்கிடையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குகள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்திற்குள் பெண்மணி ஒருவர் அனுமதியின்றி நுழைந்தது சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) நீக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்திருக்கின்றன.

தமிழர்களின் பழங்கால வரலாற்றை நாவல் வடிவில் கொண்டு வந்து புரட்சி செய்த வெங்கடேசன், மதுரை நாடாளுமன்றத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக – திமுக கூட்டணி சார்பாக – வெற்றி பெற்று சாதனை படைப்பாரா?

-இரா.முத்தரசன்