Home Photo News “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை

“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை

1855
0
SHARE
Ad

சிங்கப்பூர் – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம் நாள் சிங்கப்பூர் உமறுப் புலவர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.

அந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறிய பின் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்புரை தொடங்கியது. தொழில்நுட்ப நிபுணர் முத்து நெடுமாறன் “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான தன் உரையை வழங்கத் தொடங்கினார்.

இப்போதைய திறன்பேசி எளிதாகச் செய்யும் ஒரு செயலை ஒரு மாபெரும் கணிணி கூட அக்காலத்தில் எவ்வாறு செய்யத் திணறியது எனச் சொல்லி கணினிக் கட்டமைப்பின் தற்கால வளர்ச்சியை சிலாகித்தார் முத்து நெடுமாறன்.

#TamilSchoolmychoice

அவர் தமிழில் எழுத்துரு உருவாக்கிய காரணம், அப்படி உருவாக்கத் துவங்கிய போது பலருக்கும் இருந்த தனித்தனிக் கருத்துகள், அவருக்கு இருந்த பொதுவான பயன்பாட்டுத் தேவை என்ற அணுகுமுறை, பின்னர் முதன் முதலில் கணினியைத் திறந்து, அதனுள் இருக்கும் அட்டைகளில் பதிக்கப்பட்டச் சிப்களை ஆராய்ச்சி செய்து, முதன் முதலில் கணினித் திரைகளுக்கும் அச்சு இயந்திரங்களுக்கும் தனித்தனியே தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிய விவரம் ஆகியவற்றை சொல்லி நிறுத்திய போது, கரவொலியால் அவருக்கு மரியாதை செலுத்தியது அரங்கம்.

2005ஆம் ஆண்டில் செல்லினம் என்னும தனது செயலி சிங்கையில் வெளியான விவரம், அதற்கு அழகிய பாண்டியன் எவ்வாறு தயங்காமல் முன்னின்று உதவினார் என மனம் திறந்து நன்றி கூறியது அவரது உரையின் இடையே இடம் பெற்ற நெகிழ்வான செய்தி.

பின்னர் மெல்ல மெல்ல மைக்ரோசாப்டு, கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு மொழிகளின் எழுத்துக்களை தங்களின் செயலிகளில் நிறுவியதையும், அதனால் நாம் அனைவரும் எளிதாகத் தமிழில் செய்தி பரிமாறிக் கொள்வது நடக்கிறது என்ற வளர்ச்சியையையும் சொன்ன போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையர் பலருக்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் முன்னேற்றமான வசதிகள் முன்பு எளிதாக இல்லை என்பது புரிந்திருக்கும்.

அரசு அளவில் யுனிகோட் எழுத்து முறையைப் பயன்படுத்த முதலில் சொன்ன நாடு சிங்கப்பூர் என்று கூறி, தொழில் நுட்பத்தை உடனே தழுவும் சிங்கையின் தூரநோக்கு சிந்தனையையும் முத்து நெடுமாறன் பாராட்டினார்.

தமிழுக்காக மேம்படுத்தப்படும் தொழில் நுட்பமாக இருந்தாலும் அது உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்னை வழிகாட்டும் உலகத் தமிழ் இணைய அமைப்பான உத்தமத்தின் நிறுவனர் அருண் மகிழ்நன் அவர்களைச் சரியான தருணத்தில் குறிப்பிட்டார் முத்து நெடுமாறன். ஒரு காலகட்டத்தில் முத்து நெடுமாறனும் உத்தமத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தார் என்பதும், பேராசிரியர் அனந்தக்கிருஷ்ணனுக்குப் பின் சில ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் தமிழ் வரிவடிவத்தைப் பயன் படுத்தும் மக்களின் தொகை, எண்ணிக்கை அடிப்படையில் 11-ஆவது இடம். அதனால் இப்போது தமிழுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்படுகிறது. எனவே துணிந்து குறைகளைச் சுட்டிக் காட்டலாம் என்று முத்து ஊக்கம் ஊட்டினார்.

தொழில்நுட்ப நிறுவனங்களைத் தவிர, பொது அமைப்புகளும் ஆர்வமுள்ள தனி நபர்களும், தமிழ்த் தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமானால், 80 விழுக்காடு முழுமை அடைந்தால் போதாது. அவை 100 விழுக்காடு முழுமைபெற வேண்டும். எல்லாச் செயலிகளிலும் பயன்படுத்தக் கூடியத் தன்மையைப் பெற வேண்டும் என்று கூறிய முத்து நெடுமாறன், தமது உரையில் வழங்கியக் கருத்துகளை மேலும் விளக்கும் வண்ணம், தனது மூன்று பணிகளை எடுத்துக்காட்டாகக் காண்பித்தார்.

முதலாவது “கனியும் மணியும்” என்னும் மாணவர்களுக்கான திட்டம். இதன் முதல் செயலி சிங்கப்பூர் தமிழ் கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவில் வெளியிடப்பட்டது என்றும், இதன் அடுத்தடுத்தப் பதிப்புகளுக்கானத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தீட்டப்பட்டுள்ளதை விளக்கினார்.

செல்லினம் எனப்படும் தனது தமிழ் உள்ளீட்டுச் செயலி, தற்போது 1.3 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பதையெல்லாம் கூறி, “சொல்வன்” என்ற தனது தமிழ் வாசிப்புச் செயலியைச் செயல் முறை விளக்கம் காண்பித்து அசத்தினார்.

செல்லினத்தில் “யாகாவாரா’ என்று ஒரு சொல்லை தட்டச்சு செய்த உடன் அதுவே மீதிக் குறளைத் தானே கொண்டு வந்தது பலத்த வரவேற்பைப் பெற்றது. இறுதியில் “அருண் வணக்கம். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் தட்டெழுதினார். அதை அப்படியே உரக்கப் படித்தது “சொல்வன்” என்ற அவரது புதிய செயலி.

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தமிழ் மொழி விழாவை வெறும் பழம்பெருமை பேசும் விழாவாக நடத்தாமல், தொழில் நுட்பத் துறை வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழைப் பயன்படுத்தி வருவது நல்ல விளைவுகளை விரைவில் தரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

முத்து நெடுமாறன் சிங்கையில் வழங்கிய “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான உரையின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” நிகழ்ச்சியின் மேலும் சில படக் காட்சிகள்:

தகவல் உதவி : நன்றி – ஏ.பி.இராமன் முகநூல் பக்கம்

படங்கள்: நன்றி – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர் பிரிவு – முகநூல் பக்கம்