Home நாடு முன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா?

முன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா?

1273
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை தொடங்கி 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகளுக்காக செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்களின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்களின், குறிப்பாக சிறந்தப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குக் கூட இடம் கிடைக்காததை தனது சிறப்புப் பார்வையாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில், அதாவது 2012-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் ஏற்கனவே இருந்த 500 இடங்களுக்கு, மேலும் 1000 இடங்களை வழங்கி இந்திய சமூகத்தை மகிழ்ச்சிப்படுத்தினார். பின்பு, கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, அந்த எண்ணிக்கையை 2,200-ஆக உயர்த்தி, இந்தியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இம்முறை சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெறாதது இந்திய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கூடிய விரைவில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் எடுத்துரைக்க வேண்டும் என மலேசிய நண்பன் நாளிதழ் கேட்டுக் கொண்டது.

#TamilSchoolmychoice

அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் தேர்தலில் இந்தியர்களின் பெரும்பாலான வாக்குகளை தேசிய முன்னணி மீண்டும் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு, கருத்துரைத்த பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார், இந்தியர்களின் வாக்குகளை மீண்டும் பெறுவதற்கு, நம்பிக்கைக் கூட்டணி அவர்களுக்கு செய்து தந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய சமூகத்தினரின் வாய்ப்புகள் இப்படி ஒவ்வொன்றாக பறிக்கப் பட்டு வருவது நம்பிக்கைக் கூட்டணியின் மீது இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தி உள்ளது.