Home இந்தியா மோடி அமைச்சரவையில் அமித் ஷா! தமிழகத்திலிருந்து யார்?

மோடி அமைச்சரவையில் அமித் ஷா! தமிழகத்திலிருந்து யார்?

1058
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த சில நாட்களாக இந்தியத் தலைநகரின் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான கேள்வி – பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சராவாரா? அல்லது பாஜக தலைவராகவே தொடர்வாரா என்பதுதான்!

இன்றிரவு இந்திய நேரப்படி 7.00 மணிக்குப் பதவியேற்கப்போகும் மோடியின் இரண்டாவது தவணைக்கான அமைச்சரவையில் அமித் ஷா இடம் பெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அவர் நிதியமைச்சராகவோ, உள்துறை அமைச்சராகவோ பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்குப் பதிலாக ஜே.பி.டட்டா பாஜகவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். பாஜகவைப் பொறுத்தவரை ஒருவர் கட்சி அல்லது அரசாங்கம் என ஒரே ஒரு பதவிதான் வகிக்க முடியும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அதன் காரணமாக, அமித் ஷா இனி பாஜக தலைவராகத் தொடர மாட்டார்.

இதற்கிடையில், தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் அல்லது ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திர குமார் ஆகிய இருவரில் ஒருவர் மோடியின் அமைச்சரவையில் இணையலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டாலும், இதுவரையில் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சராக நியமனம் பெறப் போகிறவர்கள் மோடியின் இல்லத்தில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். அந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அதிமுக சார்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாஜக சார்பில் தமிழ் நாட்டிலிருந்து யாராவது நியமனம் பெறுவார்களா என்பதும் தெரியவில்லை. கடந்த தவணையில் நல்ல தமிழ் பேசக் கூடிய நிர்மலா சீதாராமன் மோடி அமைச்சரவையில் இருந்து கொண்டே தமிழ் நாட்டுக்கான பொறுப்பாளராகவும், சில விஷயங்களில் பேச்சாளராகவும் செயல்பட்டார்.

மோடியின் இரண்டாவது தவணைக்கான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மீண்டும் அமைச்சராக இடம் பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன் காரணமாக தமிழ் நாடு விவகாரங்களில் அவர் தொடர்ந்து செயல்படக் கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் மீண்டும் மோடி அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

இதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெய்சங்கர் மோடியின் இல்லத்திற்கு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் மோடி அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும், வெளியுறவு அமைச்சராகவோ, அல்லது இணை வெளியுறவு அமைச்சராகவோ அவர் நியமனம் பெறலாம் என்ற ஆரூடம் நிலவுகிறது.

-செல்லியல் தொகுப்பு