Home Photo News அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து நெடுமாறன்!

அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து நெடுமாறன்!

1488
0
SHARE
Ad

சான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில்  மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சான் ஓசே நகரில்  ஜூன் 3 தொடங்கி ஜூன் 7-ஆம் தேதிவரை நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக மேம்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள முத்து நெடுமாறன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் கல்விக் கழகம்

கலிபோர்னியாவின் வளைகுடா பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களினால் தொடங்கப்பட்டது கலிபோர்னியா தமிழ் அகாடமி என்னும் அமைப்பாகும். ஒத்த கருத்துடைய சில நண்பர்களின் துணைகொண்டு இந்த அமைப்பை முன்னெடுத்துத்  தொடக்கியவர் வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம் ஆவார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அங்கு  பிறந்த குழந்தைகளுக்கு தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டது இந்த அமைப்பாகும்.

அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் தோற்றுநர் வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம்

இந்த நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட மாநிலக் கல்வி வாரியங்களோடு இணைந்து செயலாற்றிய இந்த அமைப்பு, தங்களிடம் படிக்கும் மாணவர்கள் பெறும் தேர்ச்சி புள்ளிகளை அவர்களின் மைய பள்ளிப் பாடங்களுக்கான தேர்வுகளில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெறும் நோக்கில் பெரும் பங்காற்றியது.

இன்று இந்த அமைப்பு வார இறுதி நாட்களில் நடத்தும் சிறப்பு தமிழ் வகுப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். கலிபோர்னியா தமிழ் அகாடமி கற்பிக்கும் பாடங்களுக்கென பிரத்தியேக பாடத் திட்டங்களை அந்த அமைப்பு கொண்டிருக்கிறது. மாணவர்கள் இங்கே கல்வி கற்பதோடு, தேர்வுகளுக்கும் அமர்ந்து தங்களுக்கான தேர்ச்சி புள்ளிகளைப் பெறுகின்றனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டாலும் இந்த அமைப்பு அமெரிக்காவின் மற்ற மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் கூட தனது செயல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த செயல் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் காரணமாக, கலிபோர்னியா தமிழ் அகாடமி தற்போது உலகத் தமிழ்க் கல்விக் கழகம் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி கலிபோர்னியா தமிழ் அகாடமி, 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சான் ஓசே நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா, நகரின் பூங்கா ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக அந்தப் பூங்கா தற்காலிகமாக பொதுமக்களுக்காக மூடப்பட்டது. பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பில் நீண்ட காலமாக சேவையாற்றியவர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழா இரண்டு கருத்தரங்குகளாக நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி நடத்தப்பட்ட முதல் கருத்தரங்கத்தை இந்த அகாடமியின் முன்னாள் மாணவர்களே நடத்தினர்.

இரண்டாவது கருத்தரங்கம் பொதுவிழாவாக, பூங்காவில், கலந்து கொண்டவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களின் வருகையோடு நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு மூன்று சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் மலேசியாவிலிருந்து சென்ற முத்து நெடுமாறனும் ஒருவராவார்.

முத்து நெடுமாறனின் உரை

உலகத் தமிழ்க் கல்விக் கழகம், கலிபோர்னியா தமிழ் அகாடமியாகச் செயல்பட்ட காலத்திலிருந்து இந்த அமைப்போடு நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதோடு, அந்த அமைப்பின் பல நிகழ்ச்சிகளிலும் ஏற்கனவே கலந்து கொண்டுள்ள முத்து நெடுமாறன் இந்த 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனதுரையில் புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் புலம் பெயரும் நாட்டின் மொழியோடு தாய்மொழியான தமிழையும் படிப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஒருவர் தாய்மொழி உள்ளிட்ட மற்ற பல மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பதால் ஏற்படக் கூடிய பலன்கள், நன்மைகள் ஆய்வு பூர்வமாக உலகம் எங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவின் சில படக் காட்சிகள்: