கூச்சிங்: ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரமாக நேற்று வியாழக்கிழமை கூச்சிங்கில் உள்ள தங்களது வீட்டை காவல் துறையினர் அத்துமீறி நுழைந்ததாக ஹசிக் அசிஸ்சின் தகப்பனார் அப்துல்லா அப்துல் அசிஸ் கூறினார்.
நேற்று மாலை 5 மணியளவில் அவரது மகளுடன் வீட்டில் இருந்த போது காவல் துறையினர் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
“அவர்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற எந்தவொரு அடையாளத்தையும் காட்டவில்லை, ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு காவல் அதிகாரிகள் போன்று இருந்தனர். மேலும், புக்கிட் அமானிலிருந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்” என்று அவர் கூறினார்.
“அவர்கள் என் மகனைப் பற்றி மட்டுமே கேட்டனர்.” என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து தாம் காவல் துறையில் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
மேலும், வெளியிடப்பட்ட அந்த காணொளியில் இருப்பது தன் மகனல்ல என ஹசிக்கின் தந்தையார் கூறியுள்ளார்.
பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை ஓரினச் சேர்க்கை காணொளி ஒன்றோடு இணைத்து பேசியதன் பேரில் ஹசிக் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தம்முடன் அக்காணொளியில் இருந்தது அஸ்மின்தான் என ஹசிக் கூறிய வேளையில், அஸ்மின் அதனை மறுத்தார். அரசியல் நோக்கத்திற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என ஓர் அறிக்கையின் மூலம் அஸ்மின் குறிப்பிட்டிருந்தார்.