கோலாலம்பூர்: பாசிர் கூடாங் பகுதியில் காற்று மாசுபாடு காரணம் குறித்த முழு விவரங்களும் இன்னும் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டாக்டர் சாருடின் ஜமால் கூறினார். கடந்த வியாழக்கிழமை முதல் பள்ளி மாணவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இராசயன மாற்றங்களை அடையாளம் காணும் இறுதி கட்டத்தில் உள்ளதாக அவர் என்றார்.
இதற்கிடையில், பாசிர் கூடாங்கில் உள்ள 30 இரசாயன ஆலைகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட இரசாயனங்கள் சமீபத்திய மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளதா என்பதை அறிய ஆய்வு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
பாசிர் கூடாங்கில் இம்மாதிரியாக 265 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக டாக்டர் சாருடின் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலும் சுமார் 75 பேர்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாசிர் கூடாங் பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூட வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.