கோத்தா பாரு – சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மலேசிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் அவர் கிளந்தான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து மதப் பிரச்சாரம் செய்கிறார் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் பட்சிலி அறிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்படவிருக்கும் நிகழ்ச்சிகள் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவு தருவதற்காகவும், அவரை நாடு கடத்த முடியாது என பிரதமர் மகாதீர் கூறியிருக்கும் கருத்துக்கு மதிப்பளிப்பதற்காகவும் என முகமட் பட்சிலி கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கிளந்தான் மாநில அரசு ஊழியர்களிடையே ஜாகிர் நாயக் உரையாற்றுவார் என பாஸ் கட்சியின் அதிகாரத்துவ ஊடகமான ஹரக்கா ஒன்லைன் தெரிவித்திருக்கிறது.
அதன் பிறகு அன்றிரவே, பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், இளைஞர்களிடையே அவர் உரையாற்றுகிறார். மறுநாள் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை முடிந்தவுடன் குபாங் கெரியானில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெத்ரா பள்ளி வாசலில் அவர் உரையாற்றுவார்.
மேலும் பல நிகழ்ச்சிகளும் ஜாகிர் நாயக்கிற்காக வரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தும் விண்ணப்பத்தை மலேசியா பெற்றிருப்பதாக வெளியுறவு அமைச்சர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
தன்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை தன்னை சிறையில் அடைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை இந்திய உச்ச நீதிமன்றம் அளித்தால்தான் இந்தியாவுக்குத் திரும்புவேன் என ஜாகிர் நாயக் கூறிவருகிறார்.
எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி மும்பையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஜாகிர் நாயக் நீதிமன்றம் வரவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.