கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இளமை குறையாமல் துடிப்போடு செயல்படும் இயக்கம் என்றால் அது மிகையாகாது. இவ்வியக்கம் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு நடவடிக்கைகளை சமுதாய நலன் பொருட்டு நடத்தி வருகின்றது. அவ்வகையில், இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சி தமிழ் விழாவாகும்.
நம் நாட்டில் தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடக்கி வைத்த தமிழர் திருநாள் ஒரு காலத்துக்குப் பின் நலிவுற்றது. 1984-இல் இதனை மனதில் நிறுத்தி அப்போது முதல் தமிழ் விழாவாக இந்த விழாவை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இவ்விழா கொண்டாடப்பட்டுள்ளது.
முதலாவது ஆண்டாக 1984இல் தமிழ் விழா கொண்டாடப்பட்ட காலத்தில் இவ்விழாவினை கோ.சாரங்கபாணி அவர்களின் தொண்டினை நினைவுகூர்ந்து விழாவாக்கினோம். உதயம் இதழ் ஆசிரியர் துரைராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவ்விழாவில் மொழிநலம், இனநலம், பொதுநலம், கலைநலம் கொண்டு செயலாற்றிய நமது முன்னோடிகளை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோறும் அவர்களுக்கு இவ்விழா ஈகம் செய்யப்பட்டுவருகின்றது. பின்னாளில் துறைசார்ந்து பணியாற்றிய சிலரும் ஆண்டுதோறும் இவ்விழாவில் சிறப்பிக்கப்படுகின்றனர்.
35ஆவது ஆண்டாக நிகழவிருக்கும் இவ்வருட தமிழ் விழா பலருடைய கனவுகளைத் தாங்கி நிகழவிருக்கும் ஒரு நிகழ்வாகும். சுமார் ஒரு மாதக் காலம் நடைபெறும் இவ்விழாவானது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புதிர்ப் போட்டி, பரதநாட்டியப் போட்டி என பலவிதமான போட்டிகளுடன் 8 ஜூன் துவங்கி கோலாகலமாக நடந்தேறி வருகிறது.
இவ்வருட தமிழ் விழாவானது, ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு ஈகம் செய்யப்படுகின்றது. தமது ஓவியங்களின் மூலம் சமூகச் சேவையாளராகவும், மொழி, இனப் பற்றாளராகவும் தமது வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியுள்ளார். இவ்வினிய தமிழ் விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாய் கலை இரவு கீழ்க்காணும் நிரலின்படி நடைபெறும்.
நாள் : 13 ஜூலை 2019 (சனிக்கிழமை)
நேரம் : மாலை மணி 7.30
இடம் : திருவள்ளுவர் மண்டபம், ஜாலான் கஸ்டாம், கோலக்கிள்ளான்
கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் ஓவியத்துறையில் நம் நாட்டில் அரும்பணியாற்றிவரும் ஓவியர் சையது தஜூடின் மற்றும் ஓவியர் டாக்டர் எஸ்.சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு செய்யும் அங்கமும் இடம்பெறும்.
நாட்டில் பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்துவரும் நமது இளையோருக்கும் இந்நிகழ்ச்சியில் அங்கீகாரம் செய்யவுள்ளோம். அங்ஙனம் இவ்வாண்டு, பனிச்சருக்கு வீராங்கனை செல்வி அபிராமி சந்திரனும் உலக பாரா அம்பெய்யும் போட்டியின் தங்கப் பதக்க வெற்றியாளர் சுரேஸ் செல்வதம்பியும் அங்கீகாரத்தினை ஏற்றுக் கொள்வர்.
இலவசமாக நடைபெறும் இக்கலை இரவு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராய் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ்.ப.தியாகராஜன் கலந்து சிறப்பிப்பார். இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.