Home கலை உலகம் திரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்

திரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்

1861
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் தமிழ்ப் படங்களில் விலங்குகளை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது அரிதாகி விட்ட நிலையில், ஒரு சிம்பன்சி வகை மனிதக் குரங்கை ‘கோங்’ என்ற மையப் பாத்திரமாக வைத்து, நடிகர் ஜீவா-ஷாலினி பாண்டே இணையோடு, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகிபாபு, மொட்டை இராஜேந்திரன், இராதாரவி என நகைச்சுவைப் பட்டாளத்துடன் களமிறங்கி இயக்குநர் டான் சான்டி கலக்கியிருக்கும் படம் “கொரில்லா”.

படம் தொடங்கி இறுதிவரை சிரித்து மகிழலாம். சில லாஜிக்குகளை மனதில் ஏற்றிக் கொள்ளாமல், இப்படியும் நடக்குமா என்பது போன்ற கேள்விகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், வயிறுவலிக்க சிரிப்பூட்டுகிறது படம்.

படத்தை ஆல்இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் மூன்றாவது தயாரிப்பு இதுவாகும். வணிக ரீதியான நகைச்சுவைப் படம் என்றாலும் கதாநாயகன் – நாயகியின் காதல் பாடல்கள், கவர்ச்சிக் காட்சிகள் என எதையும் திணிக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயக்குநரின் சிந்தனையிலேயே படத்தை எடுக்க முன்வந்திருக்கும் இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பாராட்டு வைக்கலாம்.

திரைக்கதை

#TamilSchoolmychoice

வங்கியைக் கொள்ளையடிப்பதால், அதில் மாட்டிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் பார்த்த ஆங்கிலப் படங்களை வைத்து அதற்கேற்ப, வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறோம்  எனக் கதாபாத்திரங்களே கூறிவிடுவதால், ஆங்கிலப் படக் காட்சிகளை தழுவியிருக்கிறார்கள் என யாரும் குற்றம் சாட்ட முடியாது.

மூன்று நண்பர்கள் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, தங்களுக்கிருக்கும் பணப் பிரச்சனைகளுக்காக வங்கியைக் கொள்ளையடித்து தங்களின் பணப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

அவர்களோடு இணைந்து கொள்கிறார் விவசாயக் கடனால் தத்தளிக்கும் கிராமத்திலிருந்து வந்த விவசாயியான மதன்குமார் (ஏற்கனவே அருவி படத்திலும் ‘பேட்ட’ படத்திலும் நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர்).கூடவே அவர்கள் கூட்டிச் செல்வது அவர்கள் செல்லமாக வளர்க்கும் கோங் என்ற குரங்கை.

வங்கிக்குள் அவர்கள் கொள்ளையடித்து விட்டு வெளியேறுவதற்குள்ளாக காவல் துறை வங்கியை சுற்றி வளைத்துக் கொள்ள, அதன்பிறகு உள்ளே நடக்கும் அவர்களின்அதகளத்தை – கோங் என்ற குரங்கு அடிக்கும் லூட்டிகளை – நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள்.

தங்களின் பணப் பிரச்சனையை, ஒட்டுமொத்த தமிழக மக்களின் விவசாயிக் கடன்கள் பிரச்சனையாக கதாபாத்திரங்களை வைத்து திசை மாற்றியதில் இயக்குநர் டான் சான்டி தனது தனித்திறனைக் காட்டியிருக்கிறார்.

வங்கிக்குள் வாடிக்கையாளர்களாக வந்த சில கதாபாத்திரங்கள் மாட்டிக் கொள்வது – குறிப்பாக அமைச்சரின் மகன் இருப்பது – என சில திருப்பங்களையும் புகுத்தி இறுதிவரை ஒரே பாதையில் படத்தை சுவாரசியமாக, கலகலப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

சிறந்த படத் தொகுப்பும் – நறுக்கான நகைச்சுவை வசனங்களும்

படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வது கச்சிதமான படத் தொகுப்பு. தேவையில்லாத பாடல்களைப் புகுத்தாமல், கவர்ச்சிக் காட்சிகள் வைக்காமல், சுமார் இரண்டு மணி நேரத்துக்குள்ளாக படத்தை முடித்திருப்பதால், விறுவிறுப்பும் பரபரப்பும் படம் முழுக்க தொக்கி நிற்கிறது.

அதற்கு உதவியிருப்பது, சுருக்கமான, நறுக்கான நகைச்சுவை வசனங்கள். போகிற போக்கில் பல இடங்களில் அரசியல்வாதிகள், நடப்பு அரசியல் நிலவரங்கள், வங்கிக் கடன்கள், வங்கி ஊழியர்களின் ஆணவத்தனம் என பல விஷயங்களை இரசிக்கும்படி, அதே சமயம் புண்படுத்தாத வண்ணம் கலாய்த்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, வங்கிக்குள் கொள்ளையர்கள் சிக்கிக் கொண்டிருக்க, விவசாயக் கடன்களை இரத்து செய்யக் கோரும் அவர்களின் கோரிக்கைகளால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி விடுகின்றனர்.

அப்போது வங்கிக்கு வெளியே நிற்கும் காவல் துறை அதிகாரி இராதாரவியிடம் ஒருவர் வந்து ‘சார் கமல்ஹாசன் கூட அவர்களை ஆதரித்து 5 பக்கம் டுவிட் செய்திருக்கிறார்’ என்று கூற, இராதாரவியோ ‘ஒரு பக்கம் போட்டாலே அவர் என்ன சொல்கிறார் என்பது புரியாது. அவர் ஐந்து பக்கம் போட்டிருக்கிறாரா?” என முனகுவது – போன்ற பல காட்சிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.

அதேபோல, இரவு மதுபானக் கடையில் கொள்ளையடிக்கப் போவதாக ஜீவாவும் நண்பர்களும் பேசிவிட்டு, விவசாயி மதன்குமாரை காலையில் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, காலையில் அவர் வரும்போது எல்லாவற்றையும் மறந்து விட்டுப் பேசுவதும் நல்ல நகைச்சுவை.

அதேபோல இறுதியிலும் கலகலப்பாக பொருத்தமான முறையில் திரைக்கதையில் சில அம்சங்களைப் சரியாக இணைத்துப் படத்தை முடித்திருக்கின்றனர்.

அனைத்து நடிகர்களும் நடிப்பைப் பொறுத்தவரை தங்களின் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். ஜீவாவின் கோணங்கித் தனங்களும், திருட்டு முழி சேட்டைகளும் இரசிக்கும்படி இருக்க, சினிமா ஆசையோடு வரும் விவேக் பிரசன்னா அவ்வப்போது தனது ஒற்றை வரிகளைக் கொண்டே தியேட்டரைக் குலுங்க வைக்கிறார். இவர்களோடு சதீஷூம் சேர்ந்து கொள்ள சிரிப்புக்குப் பஞ்சமில்லை.

போதாக் குறைக்கு யோகிபாபுவும், மொட்டை இராஜேந்திரனும் இன்னொரு கோணத்தில் இறங்கி அடிக்கின்றனர். யோகிபாபுவுக்கு உச்சகட்ட இராசி போலும்! அவர் வரும் முதல் காட்சியிலேயே அரங்கமே சிரிப்பில் மூழ்குகிறது.

இந்த விமர்சனத்தின் முற்பகுதியில் குறிப்பிட்டது போல் சில லாஜிக்குகளுக்கும், முரண்பாடுகளுக்கும் விளக்கம் கேட்காமல் பொழுதுபோக்குப் படம் என்று பார்த்தால், இரண்டு மணிநேரம் நம்மை மறந்து சிரித்து இரசித்து விட்டு வரலாம்.

-இரா.முத்தரசன்