புது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இந்தியா தயாராகி இருந்தது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணில் மீண்டும் சந்திரயான் 2 விண்கலம் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனமும், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனமும், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தமாக மூன்று சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன ஒளிப்பதிவு கருவிகள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், கிளர்கதிர் ஒளிமி (லேசர்) தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திரயான் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.