கோலாலம்பூர்: ஆறு மாநிலங்களின் பிகேஆர் கட்சித் தலைவர்கள் அனைத்து மாநிலத் தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவை அமைத்து கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அம்ரான் கமாருடின் (பெர்லிஸ்), ஜோஹாரி அப்துல் (கெடா), ஹாலீம் பச்சிக் (மலாக்கா), அசான் இஸ்மாயில் (திரெங்கானு), ஜாஹிர் ஹாசன் (கோலாலம்பூர்) மற்றும் முகமட் சுபார்டி முகமட் நூர் (கிளந்தான்) ஆகிய மாநிலங்களின் தலைவர்கள் மூன்று பக்கங்கள் அடங்கிய அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்கள் ஆறு பேர் மட்டும் கையெழுத்திட்ட போதிலும், அந்த ஆவணக் கடிதத்தில் 14 மாநிலத் தலைவர்களும் அன்வார் பிரதமராக பதவி ஏற்பதை அங்கீகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குழுவினை ஒருங்கிணைத்த ஜோஹாரி கூறுகையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை போர்ட் டிக்ஷனில் பிகேஆர் கட்சி நிகழ்ச்சியில் அதிகமான மாநிலத் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறினார். அந்நேரத்தில் அவர்களும் ஆவணத்தில் கையெழுத்திடுவார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆதரவானது கட்சியை வலுப்படுத்தவும், மாநிலங்களின் குரல்கள் ஓரங்கட்டப்பட்டதால் மாநிலங்களை அபிவிருத்தி செய்வதில் அன்வாரின் உதவியைக் கேட்பதுமாக இது அமையும் என்று அவர் தெரிவித்தார்.