தெஹ்ரான்: சிஐஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் இரான் கூறியுள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, இராணுவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த விவகாரத்தில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக இரானிய உளவு அமைச்சு கூறுகிறது.
ஆயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்தார். அணு ஒப்பந்தம் தொடர்பாக இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2017-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் இரத்து செய்தார். மேலும் இரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.
2018-ஆம் ஆண்டு இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுப்பதாகக் என்று கூறி, 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. கடந்த மே மாதம் டிரம்ப், இரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார்.
ஆனால், கைது செய்யப்பட்ட இந்த 17 பேரில் எத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எப்போது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூட் அலாவி தெரிவித்துள்ளார்.