கோலாலம்பூர்: சிலாங்கூர் ஆற்றில் டீசல் எண்ணெயை கலக்கச் செய்து, சிலாங்கூரில் நீர் விநியோகத்தை நாசப்படுத்திய நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளின் அடிப்படையில் காவல் துறை கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
2012-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (சொஸ்மா) கீழ் சந்தேக நபர்களை கைது செய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
“கடந்த காலத்தில் முக்கியமான பொது வசதிகள் மீதான நாசவேலை காரணமாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ் கைது செய்யப்படலாம். தீவிரமான எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம். சந்தேக நபர்கள் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம்” என்று அவர் கூறினார்.
கடந்த ஜூலை 12-ஆம் தேதி, சிலாங்கூர் ஆற்றின் மூல நீர் வளங்கள் மாசுபாடு அடைந்ததன் காரணமாக இரண்டு சம்பவங்கள் குறித்து தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) காவல் துறையில் புகார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததிருந்தது.
இந்த சம்பவத்தின் காரணமாக ஜூலை 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில், சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டம் 1, 2, 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன.