இலண்டன் – அனைத்துலக அளவில் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்த்தது போல், போரிஸ் ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்சர்வேடிவ் கட்சியின் 64 விழுக்காட்டு உறுப்பினர்கள் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து அவர் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றும் திட்டத்தை நிறைவு செய்வது, நாட்டை ஒற்றுமைப் படுத்துவது, தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெரமி கோர்பினை அடுத்த பொதுத்தேர்தலில் தோற்கடிப்பது – இவை மூன்றும்தான் தனது பதவிக் காலத்தின் நோக்கங்களாக இருக்கும் என போரிஸ் ஜோன்சன் தனது ஏற்புரையில் கூறினார்.
கலைந்த தலைமுடி, முன்னாள் இலண்டன் மேயராக வழங்கிய சிறப்பான நிர்வாகம், இலண்டன் மேயராக இருந்த போது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது, மேயராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சைக்கிளில் இலண்டன் தெருக்களைச் சுற்றுவது, அமெரிக்க அதிபர் டிரம்பையே கிண்டலடிப்பது – இவைதான் ஜோன்சனின் அடையாளங்களில் சிலவாகும்.