Home One Line P1 முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!

முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!

876
0
SHARE
Ad

மும்பை – உலகின் முதலாவது பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கும் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ் தனது சில்லறை வணிகத்தை விரிவுபடுத்த இந்தியாவைக் குறிவைத்திருப்பதோடு, அங்கு மிகப் பெரிய சில்லறை வணிக நிறுவனத்தில் முதலீடு செய்யவும் முடிவெடுத்துள்ளதாக வணிக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஈடுபடாத இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் ஆகும். இதன் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார். இவர் இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகப் பட்டியலிடப்பட்டவர். ரிலையன் நிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு ஜெப் பெசோஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் முதல் கட்டத்திலேயே இருக்கின்றன என்றும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இறுதியில் உடன்பாடு காணப்படாமலேயே இந்தப் பேச்சு வார்த்தைகள் முறிவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜூன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் தனது சில்லறை வணிக மையங்கள் மூலம் ஏறத்தாழ 5.53 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெற்றது ரிலையன்ஸ். இத்தகைய சில்லறை வணிகத்தில் மிகப் பெரிய அளவில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு தனது இணையவழி வணிகத்தை இணைத்தால் அதன் மூலம் மிகப் பெரிய வணிக மாற்றங்களையும், கூடுதல் வருமானத்தையும் பெற முடியும் என்ற இலக்கோடு ஜெப் பெசோசின் அமேசோன் இந்தப் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மற்றொரு மிகப் பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட்டும் இந்தியாவின் கணிசமான சந்தையைக் கைப்பற்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.