கோலாலம்பூர்: கடந்த வாரம் கிளந்தானில் தாம் பேசிய கருத்துகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் பெறும் எதிர்ப்பை எதிர்கொண்ட ஜாகிர் நாயக் மீது 115 காவல் துறைப் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கூட்டரசு காவல் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார். அவர் கூறிய கருத்துகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது, மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பியதோடு, சீன மலேசியர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துகளால் நாட்டில் இதுகாறும் தற்காத்து வந்த அமைதியும் , நிலைத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்ற அச்சம் மலேசிய மக்களிடத்தில் எழுந்துள்ளது.
ராய்ஸ் யாத்திம், சைட் சாதிக் போன்ற முக்கியத் தலைவர்களும் ஜாகிரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர். மேலும், ஜசெக, பிகேஆர் கட்சி அமைச்சர்களும் இது தொடர்பாக அமைச்சரவையில் பேசி கூடிய விரைவில் முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.