கோலாலம்பூர்: கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன், குடல் புண் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உணவு பற்றாக்குறை மற்றும் நீண்டகால மன அழுத்தம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையில் நோரா அன் இறந்து இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.
நோரா அன்னின் உடல் தங்கும் விடுதியிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றின் அருகே ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கற்றல் குறைப்பாடுகள் உள்ள அச்சிறுமியைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
நோரா அன்னின் பிரேத பரிசோதனை நேற்று புதன்கிழமை காலை 11.45 மணிக்கு தொடங்கி நேற்றிரவு வரையிலும் தொடர்ந்தது. முன்னதாக பாரிஸ் வழக்கறிஞர் மன்றம் நோரா அன் மரணம் குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.