கோலாலம்பூர்: இந்திய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் காரணமாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சண்டையிடவும் பிளவுபடவும் வேண்டாம் என்று மூத்த பத்திரிகையாளர் அப்துல் காடிர் ஜாசின் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில், ஜாகிர், இந்நாட்டு மக்களை விட முக்கியமானவர் போல காட்சிப்படுத்தப்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
பிதரமர் மகாதீர் முகமட்டுக்கான சிறப்பு ஊடக ஆலோசகரான அவர் கூறுகையில், ஜாகிர் நாயக்கின் பிரச்சனை மற்றவர்கள் நமக்கு விட்டுச் சென்ற சுமை என்று தெரிவித்தார்.
“முட்டாள்தனமாக ஏற்கனவே சுமையை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், புதிய சுமையைத் தானாகவே தேடிக் கொண்டார்கள்” என்று அவர் கூறினார்.
“ஜாகிர் எங்களால் இந்த நாட்டிற்கு வரவில்லை. அவர் கொண்டு வரப்பட்டார். தேசிய முன்னணி அரசாங்க காலத்தில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டது, ”என்று அவர் மேலும் கூறினார்.
பெல்டா குடியேறிகள், பெல்க்ரா விவசாயிகள், நெல் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிபிஆர்டி குடியிருப்பாளர்களை விட ஜாகிர் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது போல, அவரைக் காப்பாற்றுவதில் நம்முடைய மக்கள் சிலரின் ஆர்வத்தைப் பற்றி காடிர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் இப்போது அரசியல் காரணமாக மட்டுமல்லாமல், தோல்வியுற்ற நாடுகளில் படிக்கும் மாணவர்களிடமிருந்தும், முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மத போதகர்களாலும் சிதைந்து உடைந்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.
“அற்ப விவகாரங்களில் நேரத்தை வீணடிப்பதும், தலைகீழ் இலட்சியவாதம் மற்றும் பகுத்தறிவற்ற சிந்தனையை மகிழ்விப்பதை இனியும் ஏற்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
பாதிரியார்கள், போதகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சாமியார்களின் வருகை குறித்து அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் காடிர் பரிந்துரைத்தார்.
“முஸ்லிம்கள் மட்டுமல்ல, மத பேச்சாளர்களையும் இறக்குமதி செய்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்ற மதங்களும் இதனைச் செய்கின்றன, ”என்று அவர் கூறினார்.
“எந்தவொரு நபரும் நுழைவு விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், குறிப்பாக பொது ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தினால், அவரை உடனே வெளியேற்றப்பட்டு, நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.” என்று அவர் கூறினார்.