கோலாலம்பூர்: பேரரசியார் தெங்கு அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியா தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியதுடன், தன்னை இலக்காக வைத்து ஒரு தேச நிந்தனை டுவீட்டை வெளியிட்டதாகக் கூறப்படும் நபரை கைது செய்ததில் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று சனிக்கிழமை தொடர்ச்சியான டுவீட்டுகளில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்ததாக பேரரசியார் விளக்கினார்.
குற்றம் செய்ததாக நம்பப்படும் தனிநபர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து தனது ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தினார்.
“காவல் துறையினர் அந்த நபரை தடுத்து வைத்திருப்பது குறித்து நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். பல ஆண்டுகளாக, என் கணவரும் நானும் எங்களைப் பற்றி மோசமான விசயங்களில் ஈடுபடுத்தி பேசியவர்களின் மீது எந்தவொரு காவல் துறை புகாரையும் வெளியிடவில்லை.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
யாரோ ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை தாம் கேள்விப்பட்டதாகவும், அது குறித்து தாம் மேலும் கோபமாகவும் வருத்தமாகவும் இருந்ததால் உடனடியாக தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க முடிவு செய்ததாக பேரரசியார் தெரிவித்தார்.
“எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல் துறைக்கு தெரிவிக்கும்படி நானே அரண்மனை தரப்பிடம் கூறியுள்ளேன். நான் மீண்டும் சொல்கிறேன், அவர்களால் நான் எனது கணக்கை செயலிழக்கவில்லை. நானும் என் கணவரும் ஒருபோதும் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. நான் ஒருபோதும் சோகமாக இருந்ததில்லை (என்னைப் பற்றிய கருத்துகளைப் படித்தபோது), அதற்கு பதிலாக நான் சிரித்துக் கொள்வேன். ஏனென்றால், நான் யார் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும்” என்றார் பேரரசியார் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த காலிட் இஸ்மாத் தெங்கு அசிசாவை இலக்காகக் கொண்டு ஒரு தேச நிந்தனை டுவீட்டை வெளியிட்டதாகக் கூறி கிள்ளானில் உள்ள அவரது வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தடுத்து வைக்கப்பட்டார்.