கூச்சிங்: ஸ்ரீ அமானில் காற்று மாசுபாடு குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது. காற்று மாசுபாடு குறியீட்டில் (ஏபிஐ), இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அப்பகுதியில் அளவீடுகள் ஒரே இரவில் 365-ஆக உயர்ந்துள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் ஒரு மணிநேர கண்காணிப்பு புள்ளிவிவரங்கள்படி, சரவாக் நகரத்திற்கான ஏபிஐ வாசிப்பு ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை பதிவு செய்துள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் 290-லிருந்து, அதிகாலை மூன்று மணிக்கு 311 வரை படிப்படியாக உயர்ந்து, காலை ஏழு மணிக்கு 359-ஆக பதிவாகியுள்ளது.
ஸ்ரீ அமான், லாச்சாவ், பண்டு மற்றும் லுபோக் அன்டு ஆகியவை இந்தோனிசியாவின் களிமந்தானின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளன. அங்கு பல வாரங்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில், சரவாக் மாநிலத்தை அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது.
களிமந்தனில் 455 வெப்பப் பகுதிகள் பதிவான நிலையில், சுமத்ராவில் 450-ம், சரவாக் மற்றும் புருனேயில் அவ்வாறான பகுதிகள் இல்லை என்றும் சுற்றுச்சூழல் துறை குறிப்பிட்டது.
சரவாக்கின் தலைநகரான கூச்சிங்கில் காற்று மாசுபாடு இன்னும் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. அதாவது, காலை எட்டு மணியளவில் 219-ஆக பதிவாகி உள்ளது.