கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பேரில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு நேற்று திங்களன்று தனது வாக்குமூலத்தை காவல் துறையில் பதிவு செய்தார்.
“குற்றவியல் அவதூறு மற்றும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் நோக்கத்திற்காக நான் விசாரிக்கப்படுகிறேன். இரண்டு தரப்பினர் எனக்கு எதிராக புகார் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஒன்று டாக்டர் ஜாகிர் மற்றும், பல்வேறு காரணங்களுக்காக எனக்கு எதிராக காவல் அறிக்கைகளை வெளியிட்ட சுமார் 300 பேர் கொண்ட குழு, ”என்று திங்களன்று புக்கிட் அமானுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
ஜாகிர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விவாதிக்க தாம் அமைச்சரவையில் அழைப்பு விடுத்த அறிக்கையில்தான் இவ்விசாரணைக்கான மூலக் காரணம் என்று அவர் கூறினார்.
“நான் நாட்டில் ஒற்றுமைக்காக போராடுவதால் நான் விசாரிக்கப்படுகிறேன். இதில் அர்த்தமும் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஒற்றுமையை வளர்ப்பது எங்கள் கடமையாகும், ” என்று அவர் கூறினார்.
காவல் துறையினர் தம்மிடம் 22 கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு தாம் நேர்மையாக பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.
அவரது வழக்கறிஞர் ஜான் ஃபாம் கூறுகையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க சார்லஸ்ஸுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது என்றார்.
“அவர் தனது கடமையைச் செய்யாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக அவர் தோல்வியடைவார்” என்று ஃபாம் கூறினார்.
“சார்லஸ் சொன்னது உண்மை மற்றும் நியாயமான கருத்து. அதில் அவதூறு எதுவும் இல்லை. அவர்கள் இந்த விசயத்தை வழக்காக தொடர விரும்பினால், நாங்கள் எப்போதும் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோருக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக டாக்டர் ஜாகிர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.