Home One Line P1 மசீச இடைத் தேர்தலைச் சந்திக்க பொதுப் பேரவையை ஒத்தி வைக்கிறது

மசீச இடைத் தேர்தலைச் சந்திக்க பொதுப் பேரவையை ஒத்தி வைக்கிறது

579
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலகட்டத்தில் நடக்கவிருந்த மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) ஆண்டுப் பொதுப் பேரவையை ஒத்தி வைக்கும் முடிவை அந்தக் கட்சி எடுத்துள்ளது.

நேற்று புதன்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்ற தேசியத் தலைவர் மன்றத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாரம்பரியமாக தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வந்திருக்கும் மசீச இந்த முறையும் இடைத் தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் அம்னோவும் இந்தத் தொகுதியில் போட்டியிட நெருக்குதல்களைத் தந்து வருகிறது

எதிர்பாராதவிதமாக தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் மசீச ஆண்டுப் பொதுப் பேரவை நடைபெறும் நவம்பர் 2, 3-ஆம் தேதிகளின் காலகட்டத்தில் நடைபெறுவதால், பொதுப் பேரவைக்கான விரிவான ஏற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்த ஒத்தி வைப்பு அவசியமாகிறது என மசீச தலைமைச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.
#TamilSchoolmychoice

எனினும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் தேதிகளை அறிவித்ததில் தேர்தல் ஆணையத்திற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். 

மசீச பொதுப் பேரவையை ஒத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து அம்னோவும் தனது பொதுப் பேரவையை ஒத்தி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அம்னோவின் பொதுப் பேரவை நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாரம்பரியமாக மசீச தஞ்சோங் பியாய் தொகுதியில் போட்டியிட்டு வந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் கடுமையான சூழலிலும் வெறும் 542 வாக்குகள் வித்தியாசத்திலேயே நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான பெர்சாத்து கட்சியின் முகமட் பாரிட்டிடம் மசீச தோல்வி கண்டது. முகமட் பாரிட்டின் அகால மரணத்தினால் இங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.