தாவாவ்: அண்மையில் தாவாவ், காலாபாகானில் ஓர் ஆண் யானையை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அறுவரை, நேற்று புதன்கிழமை கைது செய்ததின் தொடர்பாக காவல் துறையை, சபா வனவிலங்கு துறை பாராட்டியுள்ளது.
மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் சபா மாநில துணை முதலமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லீவ் கூறுகையில், நேற்றைய கைதின் மூலமாக அதிகாரிகள் தங்கள் விசாரணைகளை விரைவில் முடித்து, நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுவலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்கிய தகவலறிந்தவர்களின் முயற்சிகளுக்கு லீவ் பாராட்டு தெரிவித்தார்.
தகவல்களுக்கான வெகுமதியாக 30,000 ரிங்கிட் உறுதியளித்த தரப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி, யானையின் சடலத்தை சுங்கை உடின் ஆற்றங்கரையில் கண்டவர்கள், அதன் சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து சபா வனவிலங்கு துறை தம் விசாரணையைத் தொடங்கியது.
பிரேத பரிசோதனையில், அதன் உடலில் 70 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது.
யானையை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஆறு ஆண்கள், அதாவது ஐந்து உள்ளூர்வாசிகளும், ஒரு சட்டவிரோத குடியேறியும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரில், இருவர் யானையை சுட்டுக் கொன்றதற்குப் பொறுப்பேற்றனர். மேலும் நான்கு பேர் அதற்கு உதவி உள்ளதாகக் கூறியுள்ளனர்.