கோலாலம்பூர்: இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என தவறாகக் கருதக்கூடாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
“இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, பல மலேசியர்கள் அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக நிதி உதவிகளை அனுப்பினர்,” என்று அவர் அஸ்ட்ரோ அவானியில் குறிப்பிட்டதாக மலேசியாகினி தெரிவித்தது.
“பொதுமக்களுக்கு உதவி செய்பவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று தவறாக கருதப்படுவவது சரியல்ல, மாறாக உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டுபவர்களாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”
“உள்நாட்டுப் போரின் இறுதி தருணங்களில், சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.”
“நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல மலேசியர்கள் நிதி உதவி அனுப்பினர்,” என்று அவர் புத்ராஜெயாவின் மனிதவள அமைச்சகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
இம்மாத தொடக்கத்தில், மலேசிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு 12 பேரை விடுதலைப்ப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்தனர். இதில் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.