கோலாலம்பூர்: ஹெவ் குவான் யாவின் சர்ச்சைக்குரிய கேளிக்கைக் புத்தகத்தை நாட்டின் எந்தப் பள்ளிகளிலும் விநியோகிக்கக் கூடாது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
இன்று காலை தமது முகநூலில் இது குறித்து பதிவிட்ட அமைச்சர், மலேசியாவின் கல்வி அமைச்சு இது குறித்து அவசர விசாரணையை நடத்தி வருவதாகவும், பள்ளியில் கேளிக்கைப் புத்தகத்தை விநியோகிக்க உள்ளிருந்து யாராவது அனுமதித்திருக்கிறார்களா என்று தீர்மானிக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், கல்வி அமைச்சு தீவிரமான நடவடிக்கையை எடுக்கும்” என்று அவர் கூறினார்.
பள்ளிகளை தங்கள் மலிவான பிரச்சார கருவியாகப் பயன்படுத்த முயற்சிக்கும் எவருடனும் கல்வி அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் முடிவை மதிக்க ஜசெக கட்சி அதன் உறுப்பினர்களை அணிதிரட்டவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜசெக உறுப்பினர்களால் நம்பிக்கைக் கூட்டணி கூறு கட்சியைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்கள் முரட்டுத்தனமாகவும் ஆதாரமற்றதாகவும் கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
“இத்தகைய மலிவான அரசியல் கலாச்சாரம் நிலைமையை மோசமாக்கும். இது மேலும் ஒற்றுமையின்மையை வழிவகுக்கும். மேலும், நாங்கள் செயல்பட்டு வரும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைக் கூட சீர்குலைக்கும்,” என்று அவர் கூறினார்.