கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஐந்து பேர் மீண்டும் இன்று வியாழக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
தலைமை இயக்க அதிகாரி எஸ்.சந்திரு (38), தொழில்நுட்ப வல்லுநர் எஸ்.அறிவாநந்தன் (27), எஸ்.தனகராஜ் (26), பாதுகாப்புக் காவலர் எம்.பூமுகன் (29) மற்றும் தெலோக் பங்லிமா காராங் இடை நிலைப்பள்ளி ஆசிரியர் ரெங்கசாமி (52) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் ‘அறிவேந்தன் சுப்பிரமணியம்’, ‘தமிழரசன் சிவம்’, ‘பூமகன் தமிழன்’, ‘சந்திரு சுப்பரமணியம்’ மற்றும் ‘எழிலன் எழிலன்’ என்ற முகநூல் கணக்கு பெயரைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் குழுவுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130ஜே கீழ் அவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம். மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளானபின், குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த விரும்பிய எந்தவொரு பொருட்கள் அல்லது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.
நீதிபதி அஸ்மான் அகம்ட முன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டது.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. மேலும் சொஸ்மாவின் கீழ் வரும் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் பின்னர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும்.
கடந்த அக்டோபர் 29-இல், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் பல மாநிலங்களில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் குழு தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்றும், பிணை மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் ராம் கர்பாலின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
பிணை விண்ணப்பத்தின் முடிவினை நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை விசாரிக்கும்.