ஜெட்டா: உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனமான அராம்கோ, அடுத்த மாதம் தனது முதல் பொது பங்கு சலுகை விற்பனையை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஆரம்ப பொதுப் பங்கு விற்பனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சவுதி அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நேற்று ஞாயிற்றுக்கிழமை, குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பங்குகளை விற்பனை செய்யும் என்று கூறியது. இது அந்நிறுவனத்தின் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆயினும், அதன் விலை வரம்பை அது குறிப்பிடவில்லை.
நிறுவனத்தின் ஆரம்ப சலுகை சவுதி அரேபியாவின் தடாவுல் பரிமாற்றத்தில் இருக்கும்.
“அராம்கோவின் பட்டியலில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது அனைத்துலக அளவில் எங்கள் தெரிவுநிலையை அதிகரிக்கும்.” என்று தலைமை நிருவாக அதிகாரியும் தலைவருமான அமின் நாசர் கூறினார்.
உலகளவில், மிகவும் நம்பகத்தன்மை கொண்ட எண்ணெய் நிறுவனமாக அராம்கோ இருக்கிறது என்றும், இந்த நகர்வு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் அமின் நாசர் தெரிவித்துள்ளார்.
உலகின் 10 விழுக்காடு கச்சா எண்ணெயை அராம்கோ வழங்குகிறது.