பாரிஸ்: ஹாங்காங்கில் மலேசிய மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கல்வி அமைச்சகம் சுமார் 400 மலேசிய மாணவர்களை வெளியேற்றும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.
நிலைமை சிக்கலானதாக மாறினால் மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அவர் குறிபிட்டார். அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக அமைச்சகம் அவ்வப்போது விஸ்மா புத்ராவுடன் தொடர்பில் உள்ளதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், பெய்ஜிங்கில் உள்ள மலேசிய கல்வி அமைப்பு, தொடர்ந்து ஹாங்காங்கின் நிலைமையைக் கண்காணித்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நம் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு கல்வி அமைச்சின் முன்னுரிமை” என்று மஸ்லீ பெர்னாமாவிடம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஹாங்காங்கில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால், ஹாங்காங்கிற்கான பயணம் முக்கியமானதாக இல்லையென்றால் தாமதப்படுத்துவது சிறப்பானது என்று விஸ்மா புத்ரா நேற்று மலேசியர்களுக்கு அறிவுறுத்திய பயண அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் கூறினார்.
மலேசிய மாணவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்ளவும், அங்குள்ள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் மஸ்லீ அறிவுறுத்துகிறார்.