கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் பிரச்சனை குறித்த தனது முந்தைய அறிக்கையை தற்காத்து அவர் பேசியுள்ளார்.
கல்வி அமைச்சின் பாடப்புத்தகத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி ஓர் அறிக்கையை வெளியிட்டபோது, மஸ்லீ மாலிக் உட்பட யாரையும் தாம் மேற்கோள் காட்டவில்லை என்று அசிராப் கூறினார்.
அப்படியிருந்தும், புத்தகத்தில் ‘கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்துவதற்கு’ நம்பிக்கை கூட்டணி அரசாங்கமே காரணம் என்று அம்னோ இளைஞர் தலைவர் கூறினார்.
“என் அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்துப் பாருங்கள். அவருடைய பெயரை (மஸ்லீ) நான் குறிப்பிடவில்லை, இந்த படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் உள்ளடக்கங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்று கூறினேன். இந்த பாடப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை எழுதுவது கையாளுதல் மற்றும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் போது நடந்தது, ” என்று அவர் கூறினார்.