கோலாலம்பூர் – (கூடுதல் தகவல்களுடன்) மலேசியத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசாவின் தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மாஹ்முட் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் அம்பாங்கிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் நல்லுடல் இன்று காலை 9.00 மணியளவில் அம்பாங் தாமான் நிர்வானாவில் உள்ள மஸ்ஜிட் முஸ்தாகிம் மசூதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தொழுகைகள் நடத்தப்பட்டவுடன் யுகே பெர்டானா இஸ்லாமிய மயானக் கொல்லையில் நல்லடக்கம் செய்யட்டது.
93 வயதான வான் இஸ்மாயில் முதுமை காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிச் சடங்குகளின்போது பிகேஆர் தலைவரும் வான் அசிசாவின் கணவருமான அன்வார் இப்ராகிம் அவர்களின் பிள்ளைகளும் உடனிருந்தனர். அன்வார் – வான் அசிசா தம்பதியரின் புதல்வியும், நுருல் இசா அன்வாரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.
வான் இஸ்மாயிலின் நான்கு மகள்களில் வான் அசிசாவும் ஒருவராவார். வான் இஸ்மாயிலுக்கு ஒரு மகனும் உண்டு. அவரது மனைவி டத்தின் மரியா காமிஸ் ஆவார்.
இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு வான் அசிசா குடும்பத்தினருக்கு பிரதமர் துன் மகாதீர், தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, துணை தற்காப்பு அமைச்சர் லியூ சின் தோங் ஆகியோரும் அனுதாபம் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர்கள் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார், டத்தோஸ்ரீ சலாஹூடின் அயூப், நிதியமைச்சர் லிம் குவான் எங், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் ஆகியோரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு வான் அசிசா குடும்பத்தினருக்கு தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.