கோலாலம்பூர்: மலேசிய தூதரகத்திற்கு அழைத்து இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளிடமிருந்து குறிப்பிட்ட பிரச்சனைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக, எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறை பொதுவான நடைமுறையாகும் என்றும், இந்த அழைப்பின் போது இந்திய நாட்டின் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“இந்தியா திருப்தியடைந்ததா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நம் நிலைப்பாடு அனைத்து நாடுகளுக்கும் அவர்களின் பின்னணி மற்றும் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் நல்லதாக இருக்க வேண்டும் என்று தூதரகம் கூறியுள்ளது. மேலும், ஜனநாயகமற்ற நாடுகளுடனும் கூட பொருளாதார ரீதியில் நமக்கு நல்ல உறவு இருக்கிறது.”
“நாம் ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிடவில்லை. ஆனால், ஒரு சம்பவம் அல்லது விஷயம் ஏற்பட்டால், நமது பார்வையில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறோம். நாம் நமது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கலாம், அவ்வளவுதான்” என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் அறிக்கைக்கு முறையான ஆட்சேபனை தெரிவிக்க, இந்திய அரசு மலேசிய தூதரகத்தை கடந்த டிசம்பர் 22-ஆம் தேதியன்று அழைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.