கோலாலம்பூர்: பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அகமட் மஸ்லான், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் தொடர்பான விவரங்களை வருமான வரித் துறையிடம் வெளியிடத் தவறிய குற்றச்சாட்டு மற்றும் எம்ஏசிசிக்கு தவறான அறிக்கையை அளித்ததற்கும் அமர்வு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டார்.
இருப்பினும், நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில் அவர் அவ்விரு குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
முதல் குற்றச்சாட்டுக்கு, வருமான வரிச் சட்டம் 1967-இன் பிரிவுக்கு எதிராக, 2013 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி குறித்து, வருமான பாரத்தில் உண்மையான வருமானத்தைப் அறிவிக்காததன் மூலம் அகமட் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று, நஜிப்பிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கான அம்இஸ்லாமிக் பேங்க பெர்ஹாட் காசோலையை அறிவிக்கத் தவறியதாக முன்னாள் துணை நிதியமைச்சருமான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே நாளில், அக்காசோலை குற்றம் சாட்டப்பட்டவர்களால் தனிப்பட்ட முறையில் வங்கியில் பணமாக்கப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோத பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி, எம்ஏசிசி விசாரணையின் போது, மூத்த உதவி தலைமை கண்காணிப்பாளர் முகமட் ஜைரி ஜைனால் பதிவிட்ட உரையாடலில் அகமட் மஸ்லான் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 32 கீழ் உள்ள குற்றச்சாட்டுக்கு, 3 மில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகமாக அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஒருவர் உத்தரவாதத்துடன் 500,000 ரிங்கிட் பிணையில் மஸ்லான் விடுவிக்கப்பட்டார். மேலும், அவரது கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.