கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் மீதான நடவடிக்கை குறித்து பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுவிடம் ஒப்படைப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கட்சித் தலைவர்கள் தலையிடக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
“இது ஒழுக்காற்று வாரிய விவகாரம். எனவே எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு, ஒழுக்காற்று வாரியத்தை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அவர்கள் வேறு எதற்காக காத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.”
“அவர் நல்ல முடிவாக தெரிவிப்பார் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். ஒழுக்காற்று வாரியத்தின் நியமனம் தலைவரால் செய்யப்படும். மேலும், அவர் (சுரைடா) எழுதியுள்ளதாக டத்தோ அகமட் காசிம் கூறினார், ஆனால், அது ஒழுக்காற்று வாரியத்தில் உள்ள செயல்முறை என்பதால் தலைமைக்கு விரிவாகக் கூறவில்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக, சில பிகேஆர் தலைவர்கள் சுரைடாவுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
மத்தியக் குழு உறுப்பினர்கள் உட்பட 46 பிகேஆர் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இதுவரை எட்டியுள்ள ஒப்பந்தத்தையும் புரிந்துணர்வையும் குறைத்து மதிப்பிட முயற்சிகள் உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.