Home One Line P1 முகமட் யூசோப் ராவுத்தர் மீதான வழக்கைக் கைவிடுகிறார் அன்வார் இப்ராகிம்

முகமட் யூசோப் ராவுத்தர் மீதான வழக்கைக் கைவிடுகிறார் அன்வார் இப்ராகிம்

560
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது முன்னாள் உதவியாளரும், தன்மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களைச் சுமத்தியவருமான முகமட் யூசோப் ராவுத்தர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்போவதாக முன்னர் தெரிவித்திருந்த பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த முடிவிலிருந்து பின்வாங்கி அந்த வழக்கை கைவிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலை அன்வாரின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்கும் உறுதிப்படுத்தினார். முகமட் யூசுப் ராவுத்தர் அன்வாருக்கு எதிராக பாலியல் புகார் கூறி செய்திருந்த சத்தியப் பிரமாண ஆவணத்தில் கண்டிருந்த தகவல்களின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப் போவதாக அன்வார் கூறியிருந்தார்.

அன்வார் மீதான புகார்களை அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) நிராகரித்து அன்வாரின் நற்பெயரை நிரூபித்திருப்பதால் இனியும் இத்தகைய வழக்கைத் தொடர்வது தேவையில்லாத ஒன்று என தனது கட்சிக்காரரான அன்வாருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ராம் கர்ப்பால் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்வாரால் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளர் முகமட் யூசுப் கடந்த ஆண்டு நவம்பரில் சத்தியப் பிரமாணம் ஒன்றின் மூலம் குற்றம் சுமத்தியிருந்தார்.

பின்னர் டிசம்பர் 7-ஆம் தேதி காவல் துறையில் புகார் ஒன்றையும் முகமட் யூசோப் செய்திருந்தார்.

ஆயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அன்வார் தொடர்ந்து மறுத்துள்ளார்.

தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதுதான் அன்வாரின் நோக்கம் மற்றபடி அவதூறு வழக்கு மூலம் நீதிமன்றம் வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது அவர் நோக்கமல்ல என்றும் தெரிவித்த ராம் கர்ப்பால், அதன் காரணமாக, கணிசமான நேர விரயத்தையும் தேவையில்லாத செலவுகளையும் ஏற்படுத்தக் கூடிய இந்த வழக்கைத் தொடுப்பதற்கு  அன்வார் விரும்பவில்லை என்றும் ராம் கர்ப்பால் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி முகமட் யூசுப் ராவுத்தர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பேச்சுக்காக, அவர் மீது அன்வாரின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாஃபா சால்வாடோர் ரிசால் முபாராக் தனிப்பட்ட அவதூறு வழக்கொன்றை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தொடுத்திருப்பதாகவும் ராம் கர்ப்பால் தெரிவித்திருக்கிறார். முகமட் யூசுப் அவ்வாறு கூறிவரும் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளுமாறு தடையுத்தரவு ஒன்றையும் வழங்க வேண்டும் என பார்ஹாஷின் வழக்கில் கோரப்பட்டுள்ளது.