சுங்கை பூலோ – பண்டார் பாரு சுங்கை பூலோவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 75 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார். மஇகா சார்பாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் தனது சொந்த நன்கொடையாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாகவும் விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை ரஹ்மான் புத்ரா கிளப்பில் நடைபெற்ற ஆலயத்திற்கான நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் அறிவித்தார்.
ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயம் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு வருவதாகவும், இதன் திருப்பணி 90 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாகவும் இந்த ஆலயத்திற்கு மேலும் 7 இலட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாகவும் ஆலயத் தலைவர் சண்முகம் இராமச்சந்திரன் நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு முடிந்ததும் சுங்கை பூலோ வட்டாரத்திலேயே மிகப் பெரிய ஆலயமாக ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயம் திகழும்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் கலந்து கொண்டார். சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மஇகா தலைவர் சௌந்திரராஜன் உள்ளிட்ட சுற்று வட்டார மஇகா தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நேற்றைய நிதி திரட்டும் நிகழ்ச்சியில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணையமைச்சருமான பிகேஆர் கட்சியின் சிவராசாவின் அரசியல் செயலாளர் நவீன் இராசையா உரையாற்றுகையில் ஏற்கனவே சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியிருப்பதாகவும், தற்போது மேலும் ஒரு ஏக்கர் நிலத்தையும், 50 ஆயிரம் ரிங்கிட் மானியத்தையும் வழங்குவதாகவும் அறிவித்தார்.