(மலேசியாவின் மூன்றாவது பிரதமராக 1976 முதல் 1981 வரை ஐந்தாண்டுகளுக்கு சேவையாற்றியவர் துன் உசேன் ஓன். இவரது தந்தை ஓன் பின் ஜபார் அம்னோவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அம்னோவின் உதவித் தலைவராகவும், பல ஆண்டுகள் அமைச்சராகவும் பதவி வகித்த ஹிஷாமுடின் ஹூசேன் ஓன், துன் உசேன் ஓனின் மகன்களில் ஒருவர். 12 பிப்ரவரி 1922-ஆம் தேதி பிறந்த இவர் 29 மே 1990-இல் தனது 68-வது வயதில் மறைந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)
சோழ மன்னர் வழித்தோன்றலில் இராஜேந்திர பெருமன்னன், மொகலாய சாம்ராஜியத்தில் அக்பர் பாதுஷா, ஜனநாயகம் மலர்ந்த பின் நேரு பரம்பரையில் இந்திரா காந்தி போன்றவர்கள் பிறந்தது முதலே அவர்களை அரசியலின் தாக்கம் அதிகமாக பற்றிக் கொண்டது. அதனால் அவர்களெல்லாம் தத்தம் எதிர்காலத்தில் அரசியலின்வழி மிளிர்ந்தனர்.
ஏறக்குறைய இவர்களைப்போலவே இந்த மலைநாட்டின் மூன்றாவது பிரதமரும் ஒருமைப்பாட்டு தந்தையுமான துன் உசேன் ஓனும் ஆழமான அரசியல் குடும்பப் பின்னணியில் குழந்தைப் பருவம் முதலே வளர்ந்து வந்தார்.
அதனால்தான், அரசியல் தெளிவும் பொதுவாழ்க்கைத் துணிவும் உசேன் ஓனுக்கு சிறுவயதிலேயே இயல்பாக வாய்த்தன.
நாட்டின் தென்கோடி முனையில் உள்ள தலைப்பட்டணமான ஜோகூர் பாருவில் பிறந்த அவர் 17 வயதுக்குள் பள்ளிக் கல்வியை மலையகத்திலும் சிங்கையிலும் மளமளவென முடித்துக் கொண்டு 18-வது வயதில் இராணுவப் படையில் சேர்ந்துவிட்டார்.
பயிற்சி வீரராக இணைந்தவர் ஓராண்டிற்குள் தேர்ச்சி பெற்றவராக புடம் பெற்று அதற்கடுத்த ஆண்டில் இந்தியாவின் வடமேற்கு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டேராடூன் இராணுவக் கல்லூரியில் மேல் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அறுபத்தெட்டு வயது வரை வாழ்ந்த இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அதிரடித் திருப்பங்களும் மாற்றங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணமாகவே இருந்தன.
துன் உசேன் ஓனின் தாத்தா, ஜோகூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டத்தோ ஜாபார் ஹாஜி முகமது ஆவார். தந்தையோ, மலாய்க்கார்களுக்கான தேசிய அரசியல் இயக்கமான அம்னோ கட்சியைத் தோற்றுவித்தவர். அந்த அம்னோவின் இளைஞர் பிரிவுக்கு முதல் தலைவரானார் உசேன் ஓன்.
இந்திய இராணுவக் கல்லூரியில் சிறப்பாக பயிற்சியை முடித்தபின், இந்திய இராணுவப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டார். மத்திய கிழக்கு நாடுகளின் போர்முனைக்கு இந்திய இராணுவத்தின் சார்பில் சென்ற துணிச்சல் மிக்க இராணுவ வீரர் துன் உசேன் ஓன்.
போருக்குப் பின் அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ராவல்பிண்டியில் நிறுவப்பட்டிருந்த மலாயா காவல் படையில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றினார். (ராவல்பிண்டி, இப்போது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகும்)
இப்படியெல்லாம் உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றி பரந்த அனுபவத்துடன் 1945-ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய தருணத்தில் மலாயா முழுக்க மக்களின் உள்ளத்தில் சுதந்திர வேட்கை பீறிட்டுக் கொண்டிருந்தது.
காவல் துறை, பொதுச் சேவைத் துறைகளின்வழி சிறந்த முறையில் சேவை ஆற்றினாலும் அவற்றில் மனம் ஒட்டாமல் இருந்தார் துன் உசேன்.
காரணம், அரசியல் தாகம்.
அரசப் பணியைத் துறந்து அம்னோவில் இணைந்து அரசியல் களம் கண்டார்.
தொடர்ந்து சட்டக் கல்விக்காக இலண்டன் சென்று நாடு திரும்பிய உசேனை, பிரதமர் துன் இரசாக் மீண்டும் அரசியல் களத்திற்கு அழைத்ததுடன் 1969-இல் கல்வி அமைச்சராகவும் நியமித்தார்.
துணைப்பிரதமராக இருந்த துன் டாக்டர் இஸ்மாயிலின் மறைவைத் தொடர்ந்து 1973-இல் மலேசியாவின் மூன்றாவது துணைப் பிரதமராக துன் ரசாக்கால் நியமிக்கப்பட்ட உசேன் ஓன், அடுத்த மூன்றாண்டுகளில் துன் ரசாக்கின் மறைவைத் தொடர்ந்து நாட்டின் மூன்றாவது பிரதமர் ஆனார்.
துன் ரசாக், துன் உசேன் ஓன் இருவரின் மனைவியரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அரசியல் நிலைத் தன்மை, தொழில் வளர்ச்சி என்றெல்லாம் நாட்டில் பல வகையாலும் முன்னேற்றம் கண்டாலும் பல இன ஒருமைப்பாட்டிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகமுன்னுரிமை அளித்தார்; அதற்காக அரும்பாடாற்றினார்.
நாட்டில் இனப் பிரச்சினையை எவர் எந்த வடிவில் எழுப்பினாலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஊழலுக்கு எதிராகக் கடுமையானக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த உசேன் ஓனின் பதவிக் காலத்தின் போதுதான், அம்னோவில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த டத்தோ ஹருணுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அந்த வழக்கில் சிறைக்கும் அனுப்பப்பட்டார்.
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தனது துணைப் பிரதமராக துன் மகாதீரை நியமித்ததும் உசேன் ஓன்தான்.
1981-ஆம் ஆண்டில் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி சுயமாகவே, பிரதமர் பதவியிலிருந்து உசேன் ஓன் விலக, மலேசியாவின் நான்காவது பிரதமராக துன் மகாதீர் பதவியேற்றார்.
மலேசிய கூட்டு சமுதாயத்தில் ஐக்கிய உணர்வையும் சமாதான சிந்தனையையும் நிலைநிறுத்தி ஒற்றுமையைப் போற்றியதால்தான் உசேன் ஓன் மலேசிய வரலாற்றில் ‘ஒருமைப்பாட்டு தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.