கோலாலம்பூர்: கோலாலம்பூரில் தாமான் டேசா அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து அதன் கட்டுமானத் திட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையால் (டோஷ்) விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை தீர்மானிக்க விசாரணை நடத்த டோஷ் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நாளை (இன்று சனிக்கிழமை) விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், சம்பவத்திற்கான காரணம் ஒரு மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
“டோஷ் விரைவில் விசாரணையை முடிக்கும் , மேலும் தளத்தில் அனைத்து கட்டுமான பணிகளும் உடனடியாக நிறுத்தப்படும்.”
“சம்பவத்திற்கான காரணத்தை தீர்மானிக்க கூட்டரசு பிரதேச அமைச்சர் (காலிட் அப்துல் சமாட்) உடன் நான் கலந்து பேசுவேன். அத்துடன் செயல்முறை மற்றும் விவரக்குறிப்புகள் (பயன்படுத்தப்பட்டவை) சரியானதா என்பது விசாரிக்கபப்டும்” என்று அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணைகளை டோஷ் முடித்துள்ளதாகவும், அறிக்கை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுரைடா கூறினார்.
இந்த குடியிருப்பு கட்டுமான மேம்பாட்டாளர் இந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், அதிகாரிகளின் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இரண்டாவது பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு மீட்கப்பட்டார்.
“பாதிக்கப்பட்டவர் நீண்ட நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கிய பின்னர் மூச்சுத் திணறல் மட்டுமே ஏற்பட்டது, அவருக்கு சுவாசக் கருவி வழங்கப்பட்டது.”
“பாதிக்கப்பட்டவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார். மற்ற காயங்கள் அடையாளம் காணப்படும், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று அவர் கூறினார்.