
வாஷிங்டன் – இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ரிபப்ளிக் எனப்படும் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இம்பீச்மெண்ட் எனப்படும் அவரது நம்பகத்தன்மை குறித்த தீர்மானம் செனட் எனப்படும் அமெரிக்க மேலவையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு இனி தடை ஏதும் இல்லை.
எனினும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற இழுபறி நிலை இன்னும் நீடித்து வருகிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், பெர்னி சேண்டர்ஸ் ஆகியோர் முன்னணியில் இருந்தாலும், அவர்கள் இருவரின் தோற்றமும், பிரச்சாரக் கவர்ச்சியும் இதுவரையில் மக்களிடையே எடுபடவில்லை.

இந்நிலையில் போட்டி நடந்தால் அவர்களை டிரம்ப் எளிதாகத் தோற்கடித்து மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் மற்றொரு முக்கிய வேட்பாளராக மைக்கல் புளும்பெர்க் பார்க்கப்பட்டாலும், இதுவரையில் அவருக்கு ஆதரவு வாக்குகள் அதிகமாக விழவில்லை. இதன் காரணமாக, அவரால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கான பகிரங்க பொது விவாதங்களில் இதுவரையில் கலந்து கொள்ள முடியவில்லை.
அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இத்தகைய பொது விவாத மேடைகள் மிகவும் முக்கியமானக் களங்களாகும். இதன் மூலம்தான் தங்களைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள ஒரு வேட்பாளர் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் விவாதங்களில் ஈடுபட முடியும்.
திடீரென முன்னணிக்கு வந்த மைக்கல் புளும்பெர்க்
கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, மைக்கல் புளும்பெர்க் திடீரென ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் இரண்டாவது நிலைக்கு முன்னேறியிருக்கிறார்.
பெரும் பணக்காரரான அவர் மில்லியன் கணக்கான செலவில் செய்த விளம்பரங்களின் காரணமாக அவருக்கு இந்த பிரபல்யமும் செல்வாக்கும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
புளும்பெர்க் என்பது வணிக வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெயர். புளும்பெர்க் எனப்படும் வணிக ஊடகமும் அதன் தொடர்பிலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களாகும்.
78 வயதான புளும்பெர்க் அந்த நிறுவனக் குழுமத்தின் முதன்மைத் தலைமைச் செயல் அதிகாரியும் பெரும்பான்மை பங்குதாரரும் ஆவார்.
அவரது சொத்து மதிப்பு 62.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்படுகிறது.
மைக்கல் புளும்பெர்க் அரசாங்கத்திலும் நிர்வாக ரீதியாக அனுபவம் பெற்றவர். அமெரிக்காவிலேயே மிகப் பெரிய நகரான நியூயார்க்கின் மாநகராட்சித் தலைவராக (மேயர்) பணியாற்றிய அனுபவமும் மைக்கல் புளும்பெர்க்குக்கு உண்டு.
மைக்கல் புளும்பெர்க்குக்குக் கிடைத்த ஆதரவினால், நாளை புதன்கிழமை (பிப்ரவரி 20) நெவாடாவில் நடைபெறவிருக்கும் ஜனநாயகக் கட்சியின் பொது விவாதத்தில் புளும்பெர்க் பங்கு கொள்ள முடியும். அந்த விவாதத்தில் அவர் சிறப்பாகச் செயல்பட்டால், மக்களை ஈர்த்தால் – அடுத்தடுத்த வாக்களிப்புகளிலும், பொது விவாதங்களிலும் சிறப்பாச் செயல்பட்டால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக டிரம்புடன் மோதும் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.