கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ள மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை காலை 10.00 மணி தொடங்கி எஞ்சிய 132 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவிருக்கிறார்.
துன் மகாதீர் தவிர்த்து அனைவரையும் சந்திக்கப் போகும் மாமன்னர், நேற்று 89 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கருத்துகள் கேட்டிருக்கிறார்.
நேற்று அரண்மனைக்கு வெளியில் வந்து, அங்கு குழுமியிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய மாமன்னர் அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது “தற்போதிருக்கும் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலில் சிறந்த தீர்வு ஒன்றைக் காண முயற்சி செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது மாமன்னருடன் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோ சுக்கி அலியும் உடனிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.