கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு புதிய பிரதமர் மொதிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்கவிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் யார் என பல்வேறு ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அமைச்சரவையின் முழுப் பட்டியல் கூட வாட்ஸ்எப் தளங்களில் உலவி வருகிறது.
எனினும், மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புதிய அரசாங்கத்தில் மஇகாவின் சார்பில் முழு அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று அமைக்கப்படும் புதிய அமைச்சரவை நியமனங்களோடு இத்தனை நாட்களாக நீடித்து வந்த அரசியல் சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இன்று பதவியேற்கும் அமைச்சரவை உறுப்பினர்கள் யார் என்பதைப் பொறுத்தும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுப் பொறுப்புகள் குறித்தும் அடுத்த கட்ட சர்ச்சைகள் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மே 18-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அடுத்தகட்ட அரசியல் போராட்டக் களமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 18-ஆம் தேதிக்கு முன்பாகவே, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன. அந்த முயற்சியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால், மே 18-ஆம் தேதிக்கு முன்பாகவே, நடப்பு அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.