Home இந்தியா இந்திய சுதந்திரப் போராட்ட இளைஞர்களிடையே எழுச்சியை விதைத்த மாவீரன் பகத்சிங்

இந்திய சுதந்திரப் போராட்ட இளைஞர்களிடையே எழுச்சியை விதைத்த மாவீரன் பகத்சிங்

1176
0
SHARE
Ad

(இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி, அதற்காக இளம் வயதிலேயே தூக்குமேடைக்குத் தன் இன்னுயிரைத் தந்து, அதன் மூலம் அன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வீறு கொண்டு எழுந்து, இன்றுவரை வரலாற்றுப் பக்கங்களில் நினைவுகூரப்படும் மாவீரன் பகத் சிங்கின் நினைவு நாள் மார்ச் 23. அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய பகத் சிங் குறித்த இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் இளைஞர் பட்டாளத்தை வழிநடத்திய  பகத் சிங்கிற்கு பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் பரவிய புகழைவிட, அவர் முன்னெடுத்த பொதுவுடைமைப் போக்குதான் பலரையும் மிரள வைத்தது.

அமைதி வழியில் ஒரு விடுதலைப் போரை வழிநடத்திய மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்த உலகிற்கே ‘சத்தியாகிரகம்’ என்பதை அறிமுகப்படுத்தியவர்; அதன் மீதான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர். அதனால்தான் அவர் பிறந்த அக்டோபர் 2-ஆம் நாளை அகிம்சை தினமாக யுனெஸ்கோ கொண்டாடி வருகிறது.

#TamilSchoolmychoice

இருபதாம் நூற்றாண்டில்  இந்த உலகெங்கும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தொடங்கிய அரசியல் மறுமலர்ச்சியில் அமைதி வழிப்பட்ட அரசியல் போராட்டத்தையும் ஆயுதமில்லா விடுதலைப் போரையும் ஒருசேர மேற்கொண்டவர், மகாத்மா காந்தி அடிகள். விடுதலைப் போர் முனையில்அறப்போராட்டத்தையும் சத்தியாக்கிரகம் குறித்த கருத்தாக்கத்தையும் தோற்றுவித்த அண்ணல் காந்தி அடிகள், உலகெங்கும் அதிகாரக் கரங்களை நீட்டியிருந்த இங்கிலாந்து மகாராணியையே ஒரு கட்டத்தில் திடுக்கிட வைத்தார்.

அப்படிப்பட்ட காந்தி, தன்னுடைய அரசியல் பயணத்தில் இரண்டே இரண்டு பேரைக் கண்டு உள்ளூர அரண்டார்.  அவர்களில் இரண்டாமவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றால் முதலாமவர் ‘தியாக மறவன்’ மாவீரன் பகத் சிங்.

காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பட்டாபி சீதா ராமையாவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியின் பேராளர்களைத்தவிர வேறு எவரும் வாக்களிக்க முடியாது. முடிவில், சுபாஷ் சந்திர போஸ் வென்றார். ஜனநாயக முறைப்படிதான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தனைக்கும் அது, ஈரண்டு கால பதவிதான். அதைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத காந்தி, சீதாராமையா தோற்றது தன்னுடைய தனிப்பட்ட தோல்வி என்று  அறிவித்தார். அத்துடன், சந்திரபோசுக்கு எதிராக உண்ணாவிரதத்தை அதிரடியாகத் தொடங்கினார். நேதாஜியோ, நாட்டு விடுதலையைத்தான் பெரிதாகக் கருதினாரேத் தவிர, கட்சிப் பதவியை அல்ல;  அதனால், சந்திரபோஸ் கண்ணியமாக பதவி விலகினார். முன்னதாக, பாபு இராஜேந்திர பிரசாத்தையும் ஜவஹர்லால் நேருவையும் நேதாஜியை எதிர்த்து போட்டியிடும்படி கொம்பு சீவினார் காந்தி. அவர்கள் மறுக்கவே, சீத்தாராமையாவை அண்டினார் காந்தி. இது, நடந்தது 1939-இல்;

அதற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான், தான் பிறந்த மண்ணுக்காக தன்னுயிரை ஈந்தார் பகத் சிங். தூக்கு தண்டனை நிறைவேற்றப்-படும்முன் சிறைஅதிகாரிக்கு எழுதிய மடலில், நான் ஒரு போராட்டக் கைதி என்பதால், என்னை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தார். ஆனால், அதற்கு சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது அவருக்கு 23 வயது; 177 நாட்கள் மட்டுமே;  வாழ வேண்டிய வயதில் நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து இரவல் கொடுப்பதைப் போல அவராகவே முன்வந்து ஆங்கிலேய போலீசாரிடம் கைதாகி, வீர பாண்டிய கட்டபொம்மனைப் போலவும் மருது சகோதரர்களைப் போலவும் தூக்குக் கயிற்றை அரவணைத்தார் பகத்சிங்.

இலட்சக் கணக்கான இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும் வழிகாட்டும் தளபதியாகவும் திகழ்ந்த பகத் சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும் முன், அவரின் முகத்தை கறுப்புத் துணியால் மூட முயன்றவர்களைத் தடுத்த பகத் சிங், என் விழிகளால் கடைசி வினாடிவரை என் தாயகத்தைக் காண விரும்புகிறேன் என்றாராம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய குடும்பத்தில் தோன்றிய பகத் சிங்கின் இரத்தத்தில் இயல்பாகவே  விடுதலை வேட்கை கலந்திருந்தது. இவர் பிறந்த நேரத்தில் அப்பா கிசன் சிங்கும் இரு சித்தப்பாமாரும் விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.

தண்டனை முடிந்து மூவரும் வீட்டிற்கு திரும்பியபோது, அவர்களை பகத்சிங்கின் தாயார் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, “நீங்கள் சிறையில் இருந்தபோது பிறந்த அன்பு மகனைப் பாருங்கள்” என்று தன் கணவனின் கைகளில் கொடுத்த அடுத்த கணமே, “நாட்டிற்காகப் போராட நம் வீட்டில் இன்னொருவன் வந்து விட்டானா?” என்று மீசை துடிக்க சிரித்த வண்ணம் தன் நெஞ்சோடு குழந்தை பகத்சிங்கை அணைத்துக் கொண்டாராரம் கிசன் சிங்.

1919-ஆம் ஆண்டில் ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின்போது, பகத் சிங்கிறகு வயது 12. படுகொலைக்குப் பின் இரண்டு நாள் கழித்து அங்கு சென்ற பகத் சிங், இரத்தக் கறையில் சிவந்திருந்த மண்ணை ஒரு கண்ணாடிப் புட்டியில் எடுத்து அடைத்துக் கொண்டு, அதைப் பார்த்துப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக சபதம் புரிந்திருக்கிறார்.

ஐரோப்பிய புரட்சி வரலாறுகளையும் புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இடைவிடாமல் படித்துக் கொண்டு,  நெஞ்சில் உரமேற்றிக் கொண்டிருந்த பகத் சிங்கிற்கு மணம் முடிக்க அவரின் பெற்றோர் முயற்சி செய்த பொழுது, கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாராம் பகத்சிங்.

அந்த நேரத்தில், காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்திலும் ஒத்துழையாமைப் போராட்டத்திலும் தீவிர பங்கு கொண்டிருந்த பகத் சிங், “என் வாழ்க்கை தேச விடுதலைக்காக அர்ப்பணிக்க உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், குடும்ப வாழ்வு குறித்த எந்த எண்ணமும் என் சிந்தையில் இல்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாராம் பகத் சிங்.

காரல் மார்க்சின் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்த பகத் சிங், நாடு விடுதலை அடைந்து, அதிகாரமும் பண பலமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருக்கும் நிலை தொடருமானால்,  நாமெல்லாம் போராடி விடுதலையைப் பெறுவதில் பயனில்லை, அதற்கு ஆங்கிலேயரே நீடிக்கலாம் என்ற எண்ணமும் கொண்டிருந்தார். சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் சக வாழ்வும், சம வாய்ப்பும் பொருளாதார சம நிலையும் பொதுக் கல்வியும் வேண்டும் என்று விரும்பினார்.

நாடு விடுதலையும் பெற வேண்டும்; அதேவேளை, மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற அழுத்தமான சிந்தனைதான் பகத் சிங்கை இயக்கியது.

தாய்மொழி பஞ்சாபி, ஹிந்தி, உருது மொழிகளிலும் தேர்ந்திருந்த பகத் சிங், ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரை எழுதுவதில் தேர்ந்த அவர், பேச்சாற்றலிலும் வல்லவர். பல அமைப்புகளை உருவாக்கி வழி நடத்திய அவரின் பின்னால், இலட்சக் கணக்கான இளைஞர்கள் அணி திரள்வதைக் கண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பகத் சிங்கை எப்படி மடக்குவது, ஒடுக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரம் அது.

இந்த சந்தர்ப்பத்தில்தான்,  அந்த சம்பவம் நேர்ந்தது. ‘சைமன் குழு’வை எதிர்த்து, அமைதி வழியில் போராடிய லாலா லஜிபதி ராய் என்ற தலைவரை, ஜேட்ஸ் ஏ ஸ்காட் என்ற ஆங்கிலேய அதிகாரி அடித்தேக் கொன்றான்.  அவனைப் பழி தீர்க்க ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை துணை கொண்டு பகத் சிங் களத்தில் இறங்கியபோது,  தவறுதலாக அடையாளம் காட்டப்பட்ட  சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு மூவரும் தப்பி விடுகின்றனர்.

அந்த நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிரமாகப் போராடினர்.  இதை ஒடுக்க ‘தொழில் தகராறு சட்ட வரைவு’ என்ற பெயரில் புதிய கடுஞ்சட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்திய பிரிட்டிஷ் அரசு. தலைமறைவாக இருந்த பகத்சிங், இந்தக் கொடுமையான சட்டத்தை எதிர்க்கவும் இந்திய இளைஞர்களின் சார்பில் தன்னுடைய கருத்தை நீதிமன்றத்தின் வாயிலாக எடுத்துரைக்கவும்  அந்தக் கால நாடாளுமன்றக் கட்டடத்திற்கு (சென்ட்ரல் அசெம்பிளி ஹால்)  வெளியே  யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டு, காவலர்கள் தங்களை கைது செய்யும்வரை காத்திருந்தனர்.

இப்படி கைது செய்யப்பட்ட பகத் சிங், முறையாக விசாரிக்கப்படாமல் அவரை அழிப்பதிலேயே ஆங்கில ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர். 63 நாட்கள் சிறையில் இருந்த அவரை, அவசர அவசரமாக தூக்கு மேடைக்கு அழைத்தபோது, பக்த்சிங் கொஞ்சம் அவகாசம் கேட்டாராம். அப்பொழுது, இரஷ்ய கம்யூனிசத் தலைவர் லெனினைப் பற்றிய போராட்ட வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்துக் கொண்டிருந்தாராம்.

நூல்களில் இருந்து எந்நேரமும் அறிவைத் தேடிக் கொண்டிருந்த சாக்ரட்டீஸ், அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு போன்றோர் மரணத் தறுவாயிலும் புத்தகமும் கையுமாக இருந்தனர். அவர்களைப் போலவே பகத் சிங்கும் மரண வேளையிலும் படிக்க அவகாசம் கேட்டது நெஞ்சை நெகிழச்  செய்கிறது. ஒருவேளை, வ.உ.சிதம்பரம், நேதாஜி, பகத் சிங் போன்றோர் இன்னும் வாழ்ந்திருந்தால் அந்த மண்ணின் மக்கள் இன்னும் நன்மை அடைந்திருக்கலாம்.

1931-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி, போராட்டத்தைக் கைவிடுவது  என்றும் காங்கிரஸ் இயக்கமும் இனி அடக்கு முறையை காயாள மாட்டோம்; சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்கிறோம்; கையகப்படுத்திய சொத்துகளை திருப்பித் தருகிறோம் என்று ஆங்கில நிர்வாகமும் ஒத்துக் கொண்டன. இதில், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் கைவிடப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

பகத் சிங்கை தூக்கிலிட்ட பின் இளைஞர்கள் மத்தியில் ‘வந்தே மாதரம்’ என்னும் முழக்கத்துடன் வீறுகொண்ட உணர்ச்சி பொங்கி எழுந்தது. அப்போது, அமிர்தசரஸ் நகரில் பகத் சிங்கிற்கு சிலை வைக்க ஒரு சிலர் முயன்ற பொழுது சிலர் அதைத் தடுத்திருக்கின்றனர்.  

பகத் சிங்கையும் ஏனைய இருவரையும் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது, 1931 மார்ச் 24 காலை 8:00 மணி அளவில்! ஆனால், அவசர அவசரமாக ஏறக்குறைய பதினொன்றரை மணி நேரத்திற்கு முன்பாக, முதல் நாள் முன்னிரவே அவர்கள் ஏன் தூக்கிலிடப்பட்டனர் என்ற கேள்விக்கான தகவல் இப்பொழுது கசிந்து வருகிறது.

ஜேட்ஸ் ஏ ஸ்காட் என்ற அதிகாரிக்குப் பதிலாக பகத்சிங்கும் நண்பர்களும் தவறுதலாக குறிவைத்த சாண்டர்சின் என்ற அதிகாரியின் குடும்பத்தினரும் நண்பர்களும் இரகசியமாக திட்டம் தீட்டி, சிறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து இவ்வாறு செய்ததுடன் அந்த வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செய்யக்கூட வழியில்லாமல் செய்ததுடன் இரவோடு இரவோடு  சாதாரண நகராட்சி வண்டியில் ஏற்றிக் கொண்டு சட்லெஜ் ஆற்றங்கரை ஓரத்தில் துப்பாக்கி ரவைகளால் உடல்களை சிதைத்து மறைத்து விட்டு, பாதி எரிந்த வேற்று உடலை விடியற்காலையில் கொந்தளிப்புடன் கூடிய கூட்டத்தினரிடம் காட்டி ஏமாற்றினர் என்ற சோக வரலாறெல்லாம் தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் இப்போது மெல்ல வெளிவருகின்றன.

இதில், இன்னொரு சோகம் என்னவென்றால் இலக்கு வைக்கப்பட்டவர் பகத் சிங்குதான்; தவிர்க்க முடியாமல்தான் அதே வயதினரான சுகதேவும் இராஜகுருவும் சேர்த்து தூக்கிலிடப்பட்டனர்.

பகத் சிங்கின் மரணத்தை வெளியுலகுக்குத் தெரிவித்த 1931 மார்ச் 24 விடியல், நமக்கு முடிவைத் தரப் போகின்ற நாட்களில் ஒன்றாக மாறப்போகிறது என்பதை ஆங்கில ஆட்சியாளர்கள் அப்போது உணரவில்லை. கால ஓட்டத்தில் பின்னர்தான் உணர்ந்தனர்.

-நக்கீரன்

பின்குறிப்பு : நாட்டுக்காக பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகிய மூவரும் உயிர் தியாகம் செய்த மார்ச் 23-ஆம் நாள் இந்தியாவில் மாவீரர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மூவருக்கும் இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் அறிக்கைகளின்வழி அவர்களின் தியாகத்திற்குப் புகழாரம் சூட்டி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.