புதுடில்லி – எல்லாப் பிரச்சனைகளிலும் மோதல்களிலும் சில சமயங்கள் மற்றவர்களுக்கு நன்மைகள் விளைவதுண்டு.
டிரம்பின் அணுகுமுறையால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றன. சீனாவுக்கு எதிராக அடுத்து என்ன நடவடிக்கையை எடுப்பார் என்பது தெரியாமல் அமெரிக்க வணிக நிறுவனங்கள் நிலை தடுமாறி நிற்கின்றன.
எனவே, சீனாவில் இருந்து கொண்டு இயங்குவது நீண்ட கால வணிகத்திற்கு நல்லதல்ல என முடிவு செய்திருக்கின்றன பல அமெரிக்க நிறுவனங்கள். சீனாவிலிருந்து வெளியேறவும் தயாராகி வருகின்றன. இந்த வகையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறத் தயாராகி வருகின்றன.
சரி! அடுத்து எந்த நாட்டிற்கு செல்வது எனத் திட்டமிடத் தொடங்கியிருக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியாவை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன! சீனாவைப் போல மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதுதான் காரணம்.
குறிப்பாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் அப்போட் லேபராடரீஸ் (Abbot Laboratories) போன்ற நிறுவனங்கள் நிலையற்ற சூழலால் சீனாவிலிருந்து வெளியேறி இயங்கத் தயாராகி வருகின்றன.
ஜப்பானும் தனது நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேற சுமார் 2.2 பில்லியன் டாலர்கள் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டும் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்கும், குறைப்பதற்கும் முனைந்திருக்கிறது.
சீனாவிலிருந்து வெளியேறும் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஈர்க்க இந்திய அதிகாரிகள் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு துறைகளில் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய ஊக்குவிப்புத் திட்டங்களையும் இந்தியா முன்வைத்துள்ளது.
கொவிட்19 பிரச்சனைகளால் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் இந்தியாவுக்கு இது ஓர் அற்புத வாய்ப்பாகும். கொவிட்19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடுகளால் சுமார் 122 மில்லியன் மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.
இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நெருக்கடியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் எதிர்நோக்கி வருகிறது.
பல நிறுவனங்கள் நஷ்டத்தை அடைந்து, மூடும் அபாயத்தில் இருக்கின்றன.
எனவே, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா பக்கம் திருப்பி விடுவதற்கு இந்திய அரசாங்கம் மும்முரமாக நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.