மலாக்கா – இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மலாக்கா சட்டமன்றக் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சலும் குழப்பமுமாக முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் சட்டமன்றத்தைக் கூட்டி புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.
மலாக்கா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் அப்துல் ரவுப் யூசோ (படம்) புதிய சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக நடப்பு அவைத் தலைவர் ஓமார் ஜபாரின் நிலைமை இனி என்னவாகும் என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. புதிய அவைத் தலைவரின் தேர்வு சட்டபூர்வமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கசாலி முகமட் இடைக்கால அவைத் தலைவராகச் செயல்பட்டு கூட்டத்தை நடத்தி புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்.
சட்டமன்றக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அரசு சார்பு பத்திரிகையாளர்கள் மட்டுமே சட்டமன்றம் அமைந்திருக்கும் கட்டடத்தில் காணொளித் தொடர்பு (வீடியோ) இருந்த ஓர் அறையில் அனுமதிக்கப்பட்டனர்.
16 சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் ரவுப் யூசோவுக்கு ஆதரவாக வாக்களித்து அவரைத் தேர்ந்தெடுத்தனர் என பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.