கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி ஐந்து புதிய செனட்டர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதி மேலும் 4 புதிய செனட்டர்கள் நியமனம் பெறவிருக்கின்றனர்.
புதிதாக நியமனம் பெறவிருக்கும் 9 செனட்டர்களில் பாஸ் கட்சியின் இந்தியர் ஆதரவு பிரிவு தலைவராக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த என்.பாலசுப்பிரமணியம் ஒருவராவார்.
முன்பு அம்னோவில் இயங்கி வந்த அமைச்சர்களான ராய்ஸ் யாத்திம் (படம்) மற்றும் ராட்சி ஷேக் அகமட் ஆகிய இருவரும் செனட்டர்களாக நியமிக்ககப்படுகின்றனர்.
பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமட், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் சாஹிட் முகமட் அரிப் ஆகியோரும் செனட்டர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இந்த ஐவரின் நியமனங்களைத் தவிர்த்து ஜூன் 22-ஆம் தேதி செனட்டர்களாக நியமிக்கப்படவிருக்கும் நான்கு செனட்டர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ராட்சி ஷேக் அகமட் மற்றும் ராய்ஸ் யாத்திம் இருவரும் அம்னோவில் தீவிரமாக இயங்கினாலும், 2018 பொதுத் தேர்தல் காலகட்டத்தில் மகாதீரின் பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்.
தற்போது செனட்டர்களாக நியமிகப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அவர்கள் மொகிதின் யாசின் அணியில் இணைந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.
எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு நடப்பு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
புதிய செனட்டர் நியமனங்களை வைத்துப் பார்க்கும் போது அடுத்த நாடாளுமன்ற மேலவைத் தலைவராக ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராய்ஸ் யாத்திம் சிறந்த வழக்கறிஞராவார். சட்டத் துறையில் முனைவர் (பிஎச்.டி) பட்டமும் பெற்றவராவார். நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவராகவும் இருப்பார் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையில் எதிர்வரும் ஜூன் 22-ஆம் மேலும் நான்கு பேர் செனட்டர்களாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அந்த நால்வர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அந்த நால்வரில் மஇகாவின் பிரதிநிதிகள் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு நிறைவுக்கு வருகிறது.
அவருக்குப் பதிலாக மஇகா பிரதிநிதி ஒருவர் செனட்டராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.