Home கலை உலகம் “பெண்குயின்” – இரசிக்க முடியவில்லை! கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே ஆறுதல்

“பெண்குயின்” – இரசிக்க முடியவில்லை! கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே ஆறுதல்

817
0
SHARE
Ad

(ஜூன் 19 முதல் அமேசோன் பிரைம் கட்டண இணையத் தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் “பெண்குயின்” திரைப்படத்தின் விமர்சனம்)

கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற ஒன்றை மட்டுமே பிரதான விளம்பரமாக முன்வைத்து அமேசோன் பிரைம் கட்டண இணையத் தளத்தில் வெளியாகியிருக்கிறது “பெண்குயின்”. ஆங்கிலத்தில் பெங்குயின் என்ற பறவைக்கான பெயர் கொண்ட தலைப்பு படத்துக்கு வைக்கப்பட்டருக்கிறது. ஆனால் தமிழிலோ ஏனோ “பெண்குயின்” என விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே படத்தில் நம்மைக் கவர்கிறது. மற்றபடி எல்லாமே ஏற்கனவே பார்த்த எத்தனையோ “கொலைப்” படங்களின் பிரதிபலிப்பான காட்சிகளாகவே இருக்கின்றன.

#TamilSchoolmychoice

சிறுவர், சிறுமியர் கடத்தல், அவர்கள் கொலை செய்யப்படுவது, முகமூடிக் கொள்ளைக்காரன், இறுதியில் கொலைக்கான விளக்கங்கள் என வழக்கமான, எத்தனையோ படங்களில் ஏற்கனவே பார்த்துவிட்ட திரைக்கதைகளை ஒட்டியே “பெண்குயின்” படமும் அமைந்திருக்கிறது.

சுவாரசியமில்லாத திரைக்கதை

எடுத்த எடுப்பிலேயே நிறைமாதக் கர்ப்பிணியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ். முதல் காட்சிகளிலேயே ஒரு சிறுமி முகமூடி அணிந்த கொலைகாரனால் கொலை செய்யப்படுகிறார்.

கீர்த்தியின் ஐந்தாறு வயது மகன் சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது காட்டப்படுகிறது. இன்றுவரை அவன் என்னவானான் என்பது தெரியவில்லை. திடீரென அவன் கிடைக்கிறான். ஆனால் வாய் பேச முடியாத நிலையில் இருக்கிறான்.

கீர்த்தியின் மகன் காணாமல் போன பிரச்சனையால் அவரும் கணவரும் பிரிகிறார்கள். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் கீர்த்தி தனது இரண்டாவது கணவரின் மூலமாகவே தற்போது கர்ப்பமாகி பிரசவத்திற்கு காத்திருக்கிறார். காணாமல் போன மகன் கிடைத்ததும் முதல் கணவனும் மகனைப் பார்க்க திரும்பவும் வருகிறான்.

இதற்கிடையில் காவல் துறையினர் புதிய கொலைகள், சிறுவர்கள் கடத்தல் என விசாரிக்கின்றனர்.

வெகு சில கதாபாத்திரங்களே நடித்திருப்பதால் அவர்களுக்குள் ஒருவர்தான் கொலைகாரன் என்ற சந்தேகம் படம் பார்க்கும் நம்மிடையே விதைக்கப்படுகிறது.

அதன்படியே கீர்த்தி கொலைகாரனைக் கண்டுபிடிக்கிறார். ஆனால் கொலைகாரன் தரும் சில தகவல்கள் உண்மையான கொலைகாரன் இன்னொருவன் இருக்கிறான் என்பது தெரியவருகிறது.

கொலைகாரர்கள் யார்? ஏன் அந்தக் கொலைகள்? விடைகளோடு முடிகிறது படம்!

படத்தின் பலவீனங்கள்

மெதுவாக நகரும் காட்சிகள். பலமுறை பார்த்த படங்களைப் போன்றே திருப்பங்கள். எனவே இரசிக்க முடியவில்லை.

அதிலும் கொலைகாரனின் கொலைகார பீடம் அண்மையில் மிஷ்கினின் “சைக்கோ” படத்தில் வந்த அறை போலவே இருக்கிறது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்களை திரையில் மிக நெருக்கத்தில், குமட்டும் விதமாகக் காட்டுகிறார்கள். இயக்குநருக்கு ஏன் இந்த குரூர மனப் பான்மை?

கொலைகாரன் யார் என கீர்த்தி கண்டுபிடிப்பதும் அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவன் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கீர்த்தியுடன் கேள்வி-பதில் போட்டி நடத்துவதும் கேலிக்கூத்து. இப்படியெல்லாம் காவல்துறையில் நடக்குமா?

காணாமல் போன மகன் சில வருடங்கள் கழித்துக் கிடைத்தும் அடிக்கடி அவனை மீண்டும் மீண்டும் தொலைப்பது திரைக்கதையின் இன்னொரு பலவீனம். மகனைப் பாதுகாக்காமல் அவ்வளவு அக்கறையின்றியா பெற்றோர்கள் இருப்பார்கள்?

அதேபோல, இறுதிக் காட்சியில் வில்லனுடன் மோதும் அந்த நாய், அடுத்த காட்சியிலேயே என்னவானது என்பதைக் கூறாமல் திரைக்கதை நகர்வதும் இன்னொரு பலவீனம்.

இறுதியில் கொலைகளுக்காகக் காட்டப்படும் காரணங்களும் நம்பும்படியாகவோ, மனதில் பதியும்படியாகவோ இல்லை.

இப்படியாக, பல ஓட்டைகள், பலவீனங்கள் திரைக்கதையில் இருப்பதால் படத்தை இரசிக்க முடியவில்லை. இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளர் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். எப்படி திரைக்கதை தேர்வில் கோட்டை விட்டார்?

நிறைமாதக் கர்ப்பிணியான கீர்த்தியை அவரது கணவர் இப்படியா அக்கறையில்லாமல் தனியாகப் போகவர விடுவார் என்ற எண்ணமும் படம் பார்க்கிறவர்களுக்கு கண்டிப்பாக எழுகிறது.

காணாமல் போன மகன் கிடைத்தும், நிறைமாதக் கர்ப்பிணியாக ஏன் கீர்த்தி அடிக்கடி வெளியே போகிறார், சுற்றுகிறார், அதுவும் இருட்டில் தனியாக கார் ஓட்டிச் செல்கிறார் என்ற கேள்விகளும் எழுகின்றன.

எனினும், நிறைமாதக் கர்ப்பிணியின் உடல் மொழிகள், காணாமல் போன மகனுக்காக ஏங்கும் தவிப்பு, அவன் கிடைத்ததும் ஏற்படும் மகிழ்ச்சி, பேச முடியாமல் இருக்கிறானே என்ற சோகம், இப்படியாக பலவித உணர்ச்சிகளை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.

அவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் யாருமே பெயர் தெரியாத முகங்கள்! சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பும் இல்லை.

கீர்த்தி சுரேஷ் நடிப்புக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம்!

– இரா.முத்தரசன்