கோலாலம்பூர்: இன்றைய அரசாங்கம் ஊடகங்களுக்கோ அல்லது பேச்சு சுதந்திரத்துக்கோ விரோதமாக இல்லை என்பதை ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களை நம்பவைக்க உடனடியாக செயல்படுமாறு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்சில் முன்வைத்தார். விரைவில் ஊடகங்கள் மீதான அழுத்தங்களுக்கு, அரசாங்கமும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மலேசிய ஊடக மன்றம் அமைப்பதற்கான தேசிய கூட்டணியின் அர்ப்பணிப்பை இது சோதிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
“மலேசிய ஊடக மன்றத்தை அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடருமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். இதனால் ஊடகங்கள் தொடர்பான பிரச்சனைகள் முறையாக விவாதிக்கப்பட்டு, அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பொது கருத்துகளை சமரசம் செய்யாமல், ஊடகங்கள் அரசாங்க நட்பாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யலாம். ” என்று அவர் இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அல்ஜசீரா, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்ததில் நெறிமுறையற்றது என்று விமர்சித்துள்ளார்.
அல்ஜசீரா ஆவணப்படம் ஒரு பொய் என்று அவர் கூறினார்.
“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. தடுத்து வைத்தது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறினார்.
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அனுமதிக்கும் ஒரு நாட்டைக் குறிப்பிடுமாறு அல்ஜசீராவுக்கு இஸ்மாயில் சவால் விடுத்திருந்தார்.
மேலும், இந்த அறிக்கைக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அல்ஜசீராவை இஸ்மாயில் வலியுறுத்தினார்.