Home One Line P2 வங்கிக் கடன்களைச் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு இல்லை

வங்கிக் கடன்களைச் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு இல்லை

1087
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வங்கிக் கடன்களுக்கான மாதாந்திரத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் மேலும் கூடுதலான கால அவகாசம் வழங்கப்படாது என வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் இயல்பாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும் இதற்கான அவகாசம் அக்டோபர் வரையில் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

கால அவகாசம் நீட்டிப்பு இல்லையென்றாலும் கடன்களை மறுசீரமைப்பு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். ஏறத்தாழ 3 மில்லியன் கடன் பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேசிய வங்கியான பேங்க் நெகாரா அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தது. கடன்களுக்கான வட்டிக் கட்டணங்களை மட்டும் முதலில் செலுத்துவது, கடன்களுக்கான தவணைக் காலத்தை மேலும் நீட்டிப்பது, கடன் தொகைகளை இரண்டு மூன்று தவணைகளாக பிரித்துச் செலுத்துவது என பலதரப்பட்ட வசதிகளை கடன் எடுத்தவர்களுக்குச் செய்து தர வங்கிகள் தயார் நிலையில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது. கடன் பெற்றவர்களைத் தொடர்பு கொண்டு வங்கிகள் கடன்களுக்கான மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தியிருப்பதாகவும் பேங்க் நெகாரா அறிக்கை தெரிவித்தது.

அடுத்த ஆண்டு மத்திக்குள் தங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வங்கிகளுக்கு பேங்க் நெகாரா அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிக் கடன்களுக்கான கால அவகாச நீட்டிப்பை பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார். செப்டம்பர் 30 வரை ஆறு மாத காலத்திற்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த சலுகையின்படி, இந்த காலகட்டத்தில் வங்கிகளின் வீடுகள், கார்களுக்காகக் கடன்பெற்றவர்கள் அதற்கான மாதாந்திரத் தொகையைச் செலுத்த வேண்டியதில்லை.

கொவிட்-19 பாதிப்புகளால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிக்கும் விதமாக பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வங்கிக் கடன் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் நிலைமை என்னவாகும்?

எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை தெரிய வரும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இப்போதைக்கு, வணிகங்களும், தனிநபர்களும் தங்களின் கடன்களைச் செலுத்தாமல் தவிர்த்து வருகின்றனர். உண்மையிலேயே அக்டோபர் முதற்கொண்டுதான் எத்தனை வணிகங்கள், தனிநபர்கள் தங்களின் கடன்களைத் திரும்பச் செலுத்த ஆற்றல் உள்ளவர்கள், பணவசதி கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

அப்போதுதான், எத்தனை கடன்கள் திரும்பச் செலுத்த முடியாத கடன்களாக வங்கிகளால் அறிவிக்கப்படும் என்பதும் தெரியவரும்.

வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு ஆகிய பிரச்சனைகளால் தனிநபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வணிக வருமானம் இழப்பு, ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகள் இழப்பு, தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலைமை என நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் அக்டோபர் முதற்கொண்டு கடன்களைச் செலுத்த முடியாத வணிகங்கள், நிறுவனங்கள் மூடப்படலாம். தனிநபர்கள் திவால் நிலைமைக்கு ஆளாகலாம்.

எனவே, அடுத்த ஆண்டு மார்ச் வரை மேலும் 6 மாதங்களுக்கு வங்கிக் கடன்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பேசியபோது முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான பிரச்சனைகளை வேலைவாய்ப்பின்மை மேலும் மோசமாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 5 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 5.3 விழுக்காடாக உயர்ந்தது.

இவையெல்லாம் ஒன்று சேர, கடன்களுக்கான கால அவகாச நீட்டிப்பும் அக்டோபருடன் முடிவுக்கு வர, செலுத்த முடியாத கடன்களின் விகிதம் மேலும் இயல்பாகவே அதிகரிக்கும் என பேங்க் நெகாராவும் மதிப்பிடுகிறது.