Home One Line P2 ஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் – பிரிட்டன் தடை!

ஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் – பிரிட்டன் தடை!

682
0
SHARE
Ad

இலண்டன் : ஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்றம் மீதான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என பிரிட்டன் அறிவித்தது.

சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா, ஹாங்காங்கில் அமுல்படுத்தியதற்கு பதில் நடவடிக்கையாக இந்த முடிவை பிரிட்டன் எடுத்தது.

உடனடியாக அமுலுக்கு வரும் இந்தத் தடை என்றும் காலவரையின்றி அமுலில் இருக்கும் என்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“அங்கீகரிக்கப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் இருநாடுகளுக்கும் இடையில் இதுவரை இருந்து வந்த குற்றவாளிகள் பரிமாற்றம் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களையே மாற்றியமைத்துள்ளது. புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாழும் மக்களுக்கு இதனால் சட்ட, நீதிமன்ற பாதுகாப்புகள் போதிய அளவில் கிடைக்காது” என்றும் கூறிய டோமினிக் ராப் “உங்களை பிரிட்டன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அகில உலகமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது” என எச்சரித்தார்.

“பிரிட்டனுடனான குற்றவாளிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் சீனாவால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். தற்போது நடப்பில் இருக்கும் இருநாட்டு நடைமுறைகளை மீண்டும் புதுப்பிக்க நாங்கள் பரிசீலிக்கப் போவதில்லை. புதிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது, ஹாங்காங் மக்களுக்கு போதிய பாதுகாப்பும் தற்காப்பும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே மீண்டும் சீனாவுடனான எங்களின் பழைய உறவை மீண்டும் நிலைநாட்டுவோம்” என்றும் டோமினிக் ராப் தெரிவித்தார்.

ஏற்கனவே சீனாவின் வாவே நிறுவனத்திற்கு பிரிட்டன் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடைவிதித்திருக்கிறது.

சீனாவுக்கு எதிராக அணிவகுக்கும் நாடுகள்

பிரிட்டனைப் போன்று பல நாடுகள் தொடர்ந்து ஹாங்காங் பிரச்சனையால் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதியோடு ஹாங்காங் இழந்தது.

இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார். ஹாங்காங்கிற்கு எதிராக சீனா கையாண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றம் ஹாங்காங்கிற்கு எதிர்ப்பான மற்றொரு சட்டத்தையும் அங்கீகரித்திருக்கிறது. அந்த சட்டத்தின் அமுலாக்கத்திற்கும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

புதிய ஹாங்காங் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் சீன அதிகாரிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருக்கும் வங்கிகளைத் தண்டிக்க இந்த சட்டம் வழி செய்கிறது.

அனைத்துலக நிதிச் சந்தையாக இதுநாள் வரை திகழ்ந்து வந்தது ஹாங்காங். அதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் அந்தத் தீவுக்கு இதுநாள் வரை வழங்கி வந்த சிறப்பு சலுகைகள்தான்!

இந்தச் சலுகையின் மூலம் பல பொருளாதார, வணிக அனுகூலங்களை ஹாங்காங் கடந்த காலத்தில் பெற்று வந்துள்ளது.

எனினும் இனி கட்டம் கட்டமாக ஹாங்காங்கிலிருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் இடம் மாறும்; வணிகத் தொடர்புகளை குறைத்துக் கொள்ளும்; நிதி நிறுவனங்களும் வேறுநாடுகளை நோக்கிச் செல்லும்; என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கை அனைத்துலக நிதி நிறுவனங்கள் இனி நாடிச் செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. அமெரிக்கா-சீனா வணிகப் போர், சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய காரணங்களால் மெல்ல மெல்ல அனைத்துலக நிறுவனங்கள் ஹாங்காங்கில் இருந்து வெளியேறத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, 1897-ஆம் ஆண்டில் ஹாங்காங் தீவை பிரிட்டனுக்கு நூறு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தாரைவார்த்துக் கொடுத்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி 1997-ஆம் ஆண்டில் சில நிபந்தனைகளோடு ஹாங்காங்கை சீனாவின் வசம் பிரிட்டன் திரும்பவும் ஒப்படைத்தது.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு (2047 வரை) ஹாங்காங் மக்கள் சுதந்திரமாக நடத்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியையும் சீனா அப்போது வழங்கியது.